புகையிலை பொருட்கள் விற்ற 50 பேர் அதிரடி கைது

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 50 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 15 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

Update: 2022-06-16 15:46 GMT


ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 50 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 15 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

அதிரடி சோதனை

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை நிருபர்களிடம் கூறியதாவது:- தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் உத்தரவின்படி சரக போலீஸ் டி.ஐ.ஜி. மயில்வாகனன் அறிவுறுத்தலின்பேரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக அதிரடி சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்ததாக 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக 50 பேர் கைது செய்யப்பட்டு 16 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

நடவடிக்கை

மேலும், ராமநாதபுரம் உணவு பாதுகாப்புத்துறையினருடன் இணைந்து நடத்தப்பட்ட சோதனையில் மாவட்டத்தில் 6 கடைகளுக்கு தலா ரூ.5ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப் பட்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் அவை பறிமுதல் செய்யப்படுவதுடன் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் கடையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் கடத்துபவர்கள் மீது எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கையின் காரணமாக இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 49 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 85 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களிடம் இருந்த ரூ.6 லட்சத்து 60ஆயிரம் மதிப்பிலான 66 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

விசாரணை

மேலும், கஞ்சா வியாபாரிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு நிதி சார்ந்த புலன் விசாரணை மேற்கொண்டு அவர்களின் வங்கி கணக்குகள் மற்றும் அதனால் பயன் அடையும் அவர்களது குடும்பத்தினரின் வங்கி கணக்குகள் என மொத்தம் 54 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளது.

இதுதவிர, கடந்த காலங்களில் இதுபோன்று கஞ்சா மற்றும் போதைப்பொருள் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் அதனால் பயன் அடைந்த அவர்களது குடும்பத்தாரின் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை முடக்கவும் தற்போது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தகவல்

இந்த அதிரடி நடவடிக்கை தொடரும். கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்கள் மற்றும் பதுக்கி வைப்பவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் எனது பிரத்யேக செல்போன் எண்ணான 7603846847 என்ற எண்ணிலும், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 04567-230759 மற்றும் ஹலோ போலீஸ் 8300031100 என்ற எண்ணிலுதம், மாவட்ட தனிப்பிரிவு 04567-290113, 04567-299761 ஆகிய தொலைபேசி எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். அவ்வாறு தகவல் தெரிவிக்கப்படுபவர்கள் பற்றிய ரகசியம் பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்