கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு செய்த பெண் கைது
காவேரிப்பட்டணத்தில் கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு செய்த பெண் கைது செய்யப்பட்டார்.;
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கர்ப்பிணிகள் சிலர் இடைத்தரகர் மூலம் சட்டத்திற்கு புறம்பாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்கேன் சென்டரில் பாலினம் அறிந்து கொள்வதாக தகவல் வெளியானது. மேலும் பாலினம் பெண் என அறியும் கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பை கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் கொசுமேடு எம்.எஸ் நகரை சேர்ந்த உமாராணி என்பவர் செய்துவருவதும் மருத்துவக்குழுவினர் கண்டறிந்தனர்.
இதனை தொடர்ந்து கடந்த 8-ந் தேதி பர்கூர் வட்டார மருத்துவ அலுவலர் தாமரைசெல்வி தலைமையில் மருத்துவக்குழுவினர் கொசுமேட்டில் உள்ள உமாராணி வீட்டில் சோதனை நடத்தினர். அதில் எவ்வித மருத்துவ படிப்பும் படிக்காமல் சட்டத்திற்கு புறம்பாக கர்ப்பிணிகளுக்கு உமாரணி கருக்கலைப்பு செய்து வந்ததும், இதற்காக ஒருவருக்கு தலா ரூ.25 ஆயிரம் பெற்று வந்ததையும் கண்டறிந்தனர். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவான உமா ராணியை தனிப்படை போலீசார் ஓசூரில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.