கஞ்சா விற்பனையில் ஈடுபட்டபிரபல ரவுடி 6-வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது
சேலத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பிரபல ரவுடி 6-வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சேலம்
சேலம் அன்னதானப்பட்டி சண்முகா நகரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 41). பிரபல ரவுடியான இவர், கடந்த மாதம் மணியனூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கஞ்சாவை விற்பதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த போலீசார் அவரை கைது செய்து 2½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ரவுடி குணசேகரன் நாமக்கல்லில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். ஏற்கனவே இவர் மீது 3 கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் 5 முறை ரவுடி குணசேகரன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் அவரை அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்தனர். அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு அன்னதானப்பட்டி போலீசார், மாநகர போலீஸ் கமிஷனரிடம் பரிந்துரை செய்தனர். அதன்பேரில், ரவுடி குணசேகரனை தற்போது 6-வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்து கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார்.