மகுடஞ்சாவடியில் வீட்டுமனைக்கு வரைபட அனுமதி வழங்கரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி தலைவியின் கணவர் கைதுஉடந்தையாக இருந்தவரும் சிக்கினார்

Update: 2023-09-05 20:11 GMT

இளம்பிள்ளை

மகுடஞ்சாவடி ஊராட்சியில் வீட்டுமனைக்்கு வரைபட அனுமதி வழங்க ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

ரூ.50 லட்சம் லஞ்சம்

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே உள்ள எர்ணாபுரம் கிராமம் ஜெய்பூரி பகுதியில் 5½ ஏக்கர் நிலத்தை சென்னையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் வாங்கினார். இதையடுத்து 120 வீட்டுமனைகளுக்கு வரைபடத்துடன் கூடிய அனுமதி பெறுவதற்காக மகுடஞ்சாவடி ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு சென்றார். அங்கு ஊராட்சி மன்ற தலைவர் மேகலாவின் கணவர் மணிகண்டனை (வயது40) சந்தித்து விவரம் கேட்டார்.

அப்போது மணிகண்டன் ஒரு சதுர அடிக்கு ரூ.50 வீதம் லஞ்சமாக ரூ.50 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத கார்த்திகேயன் இது குறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்கள் கூறிய ஆலோசனையின் பேரில், கார்த்திகேயன், ஊராட்சி மன்ற தலைவியின் கணவரிடம் முதற்கட்ட தவணையாக ரூ.5 லட்சம் தருவதாக கூறி உள்ளார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ.5 லட்சத்தை கார்த்திகேயனிடம் வழங்கி ஊராட்சி மன்ற தலைவரின் கணவரிடம் கொடுக்குமாறு அனுப்பி வைத்தனர். அதன்பேரில் கார்த்திகேயன், மணிகண்டனை போனில் தொடர்பு கொண்டார். அதற்கு அவர், புதூரை சேர்ந்த ஆனந்தன் (37) என்பவரிடம் பணத்தை கொடுத்து விடுமாறு கூறி உள்ளார்.

2 பேர் கைது

இதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜன் தலைமையில், இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் பட்ணாம்பட்டியில் உள்ள முனியப்பன் கோவில் அருகே நேற்று பதுங்கி இருந்தனர். அப்போது கார்த்திகேயன் ரசாயன பவுடர் தடவிய பணத்தை ஆனந்தனிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்று கொண்ட அவர் மணிகண்டனை போனில் அழைத்துள்ளார்.

இதையடுத்து அங்கு வந்த மணிகண்டன் பணத்தை ஆனந்தனிடம் இருந்து பெற்றார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மணிகண்டன், ஆனந்தன் ஆகிய 2 பேரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்