கிருஷ்ணகிரி பறக்கும்படை தாசில்தார் ஜீப்பில்'ஜி.பி.எஸ்.' பொருத்தி கண்காணித்து ரேஷன் அரிசி கடத்தியவர் கைதுஉடந்தையாக இருந்த டிரைவரும் பிடிபட்டார்

Update: 2023-08-24 19:00 GMT

கிருஷ்ணகிரி பறக்கும் படை தாசில்தாரின் ஜீப்பில் ஜி.பி.எஸ். கருவியை பொருத்தி அவரை கண்காணித்து நூதன முறையில் ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த தாசில்தாரின் டிரைவரும் கைது செய்யப்பட்டார்.

இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

பறக்கும் படை தாசில்தார்

கிருஷ்ணகிரி மாவட்ட பறக்கும்படை தாசில்தாராக இளங்கோ என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தலைமையிலான குழுவினர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடத்தி ஆந்திர, கர்நாடக மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்து வருகிறார்கள். மேலும் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்களை பிடித்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தாசில்தார் இளங்கோ பயன்படுத்தி வரும் அரசு ஜீப்பில் டிரைவராக கிருஷ்ணகிரியை அடுத்த பி.சி.புதூரை சேர்ந்த சுப்பிரமணி (வயது 59) என்பவர் பணியாற்றி வந்தார். ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் கலெக்டரின் டிரைவராக பணியாற்றினார். இதையடுத்து பணி மாறுதலில் பறக்கும்படை தாசில்தார் இளங்கோவின் ஜீப் டிரைவராக பணியாற்றி வந்தார்.

ஜி.பி.எஸ். கருவி

இதற்கிடையே தாசில்தார் இளங்கோவின் சம்பவத்தன்று ஜீப்பில் ஜி.பி.எஸ். கருவி ஒன்று இருந்ததை கவனித்தார். இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுத்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இதையடுத்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் பறக்கும் படை தாசில்தாரின் டிரைவர் சுப்பிரமணியை பணிமாறுதல் செய்து கிருஷ்ணகிரி தாசில்தார் ஜீப் டிரைவராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் ஜி.பி.எஸ். கருவியை ஜீப்பில் பொருத்தியது ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வரும் குருபரப்பள்ளி அருகே நடுசாலையை சேர்ந்த தேவராஜ் (33) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கருவி தேவராஜின் செல்போன் எண்ணுடன் இணைப்பில் இருந்தது தெரியவந்தது.

2 பேர் கைது

இதைத் தொடர்ந்து தேவராஜை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் தான் ரேஷன் அரிசி கடத்தலுக்காக ஜி.பி.எஸ். கருவியை பறக்கும் படை தாசில்தாரின் ஜீப் டிரைவராக இருந்த சுப்பிரமணியிடம் வழங்கியதாகவும், அதை அவர் ஜீப்பில் பொருத்தி எனக்கு உதவி செய்தார் என்றும் கூறினார்.

இதையடுத்து ஜீப் டிரைவர் சுப்பிரமணியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் தேவராஜ் கூறியது உண்மை என தெரியவந்தது. இதை தொடர்ந்து ஜி.பி.எஸ். கருவி வாங்கி தாசில்தாரின் ஜீப்பில் பொருத்தி ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட தேவராஜ், உடந்தையாக இருந்த தாசில்தாரின் ஜீப் டிரைவர் சுப்பிரமணி ஆகிய 2 பேரையும் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் நேற்று கைது செய்தனர்.

தேவராஜ் அந்த ஜி.பி.எஸ். கருவியை எப்போது தாசில்தாரின் ஜீப்பில் பொருத்தினார். தாசில்தாரின் நடவடிக்கையை கண்காணித்து இதுவரை எத்தனை டன் ரேஷன் அரிசியை கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு கடத்தப்பட்டுள்ளது என போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பரபரப்பு

கிருஷ்ணகிரியில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க செல்லும் பறக்கும் படை தாசில்தாரின் ஜீப்பிலேயே ஜி.பி.எஸ். கருவியை பொருத்தி, அவரது வாகனத்தை கண்காணித்து ரேஷன் அரிசியை நூதன முறையில் கர்நாடக, ஆந்திர மாநிலங்களுக்கு கடத்திய நபரும், அதற்கு உடந்தையாக இருந்த ஜீப் டிரைவரும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்