ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கி சென்னை வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு - மருத்துவத் துறை செயலாளர் பேட்டி
சென்னை வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மருத்துவத் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை,
ஒடிசாவில் நேற்று இரவு 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. பெங்களூருவில் இருந்து மேற்குவங்காளத்தின் ஹவுரா நோக்கி நேற்று இரவு 7 மணியளவில் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றுகொண்டிருந்தது. அதேபோல், மேற்குவங்காள மாநிலம் ஷாலிமார் நகரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துகொண்டிருந்தது.
ஒடிசாவின் பாலாசோர் மாவட்டம் பகனாகா பஜார் அருகே பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றபோது எதிர்பாராத விதமாக அந்த ரெயில் தடம் புரண்டது. தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்ட அந்த ரெயிலின் பெட்டிகள் சில அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்தது.
அப்போது, அந்த தண்டவாளத்தில் வேகமாக வந்த ஷாலிமார்-சென்னை சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்ட பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் மீது அதிவேகமாக மோதியது.
இந்த கோர விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்தில் விழுந்தன. அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த சரக்கு ரெயில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் மீது அதிவேகமாக மோதியது. அடுத்தடுத்து 2 பயணிகள் ரெயில், 1 சரக்கு ரெயில் என மொத்தம் 3 ரெயில்கள் விபத்துக்குள்ளான சம்பவத்தில் இதுவரை 261 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 900 மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் பல தமிழர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்தவர்களை முதலுதவி சிகிச்சைக்குப் பின் விமானம் மூலம் தமிழகத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புவனேஸ்வரில் இருந்து இன்று மாலை தனி விமானம் மூலம் அவர்களை தமிழகம் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் ரெயில் விபத்தில் சிக்கி சென்னை வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மருத்துவத் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் ,
"6 மருத்துவக் குழுக்கள் ஆம்புலன்ஸ் வாகனத்துடன் தயார் நிலையில் உள்ளது.ஒடிசாவில் இருந்து வருபவர்களுக்கு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ராஜீவ் காந்தி மருத்துவமனையின் அவரச சிகிச்சை பிரிவில் 40 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. சிறிய காயம் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க 200 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. ஸ்டான்லி, ஓமந்தூரார், கீழ்பாக்கம் மருத்துவமனைகளிலும் படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
. தேவைப்பட்டால் ஒடிசா செல்ல மருத்துவர்களின் பட்டியல் தயார் நிலையில் உள்ளது. மருத்துவர்களும் தயார் நிலையில் உள்ளனர்." இவ்வாறு அவர் கூறினார்.