30 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு
நெல்லையப்பர் கோவில் தேரோட்டமான வருகிற 2-ந்தேதி 30 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
பெருங்குளம் செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச சத்யஞான தேசிய பரமாச்சாரிய சுவாமி, தெற்கு மடம் கணபதி சுப்பிரமணியன் ஆகியோர் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தையொட்டி இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் மற்றும் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கைங்கர்ய அறக்கட்டளை சார்பில் கடந்த ஆண்டு 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டம் அன்று 30 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
டவுன் பாரதியார் தெருவில் உள்ள லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளியில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இங்கு தேரோட்டத்திற்கு வரும் பக்தர்கள் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வந்து அன்னதானத்தை பெற்று சாப்பிடலாம். இதற்கு ஆண்டுதோறும் டவுன் நயினார்குளம் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் காய்கறிகளையும், சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகஸ்தர்கள் சங்கம் மூலம் கியாஸ் சிலிண்டர்களும் உபயமாக தந்து உள்ளார்கள். மேலும் அன்னதானத்துக்கு தேவையான பொருட்களை பள்ளிக்கூட வளாகத்தில் வழங்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முன்னதாக அன்னதான குழு ஆலோசனை கூட்டம் நெல்லை டவுன் ஈசான மடத்தில் பெருங்குளம் செங்கோல் ஆதீனம் தலைமையில் நடைபெற்றது. இதில் இந்து ஆலய பாதுகாப்பு குழு மாநில செயலாளர் பரமசிவன், மாநகர தலைவர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.