போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலையில் தடுப்புச்சுவரை உடைத்து வாகனங்கள் செல்ல ஏற்பாடு

வடிகால் வாய்க்கால் பாலம் அமைக்கும் பணியால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரை உடைத்து வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.;

Update:2022-07-28 01:52 IST

விழுப்புரம், 

விழுப்புரம் நகரில் சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அருகில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வடிகால் வாய்க்கால் பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியால் நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இந்த பாலத்தின் பணியினால் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முதல் ரங்கநாதன் சாலை வரை ஒருவழிப்பாதையாக மாற்றியுள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு கே.கே.சாலை, ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், ராமகிருஷ்ணா, வி.ஆர்.பி. பள்ளிகள் ஆகிய இடங்களுக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயநிலை இருந்தது. எனவே ஏதேனும் விபத்து நடந்து உயிர்பலியாவதை தடுக்கும் வகையில் பாலம் அமைக்கும் இடத்திற்கு அருகில் சாலையில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான தடுப்புச்சுவரை 20 அடி தூரம் அகற்றிவிட்டு அவ்வழியாக வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்தால் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு விபத்துகளும் தடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகத்திற்கு நகர பொதுமக்கள் பலரும் வலியுறுத்தினர். அதுபோல் விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாய சங்கத்தினரும், இதுதொடர்பாக கலெக்டரிடம் மனு அளித்தனர்.

தடுப்புச்சுவர் உடைப்பு

இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைப்படி நேற்று முன்தினம் இரவு நெடுஞ்சாலைத்துறையினர், பொக்லைன் எந்திரத்துடன் சென்று வடிகால் வாய்க்கால் பாலம் அமைக்கப்பட்டு வரும் இடத்தின் அருகில் வாகனங்கள் சிரமமின்றி எளிதாக சென்று வரும் வகையில் அங்குள்ள சாலையில் இருந்த தடுப்புச்சுவரை 20 அடி தூரத்திற்கு இடித்து அகற்றி இருவழிப்பாதையாக வாகனங்கள் செல்ல அதிகாரிகள் வழிவகை செய்தனர். இந்த நடவடிக்கையால் நேற்று முதல் சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அருகில் போக்குவரத்து நெரிசல் குறைந்து வாகனங்கள் சீராக சென்று வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்