முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாடாலூரில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாடாலூரில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.;
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (திங்கட்கிழமை) மதியம் பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தந்து, வேப்பந்தட்டை தாலுகா, எறையூரில் சிப்காட் தொழில் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் அன்று மாலை அரியலூர் மாவட்டம், மாளிகைமேட்டுக்கு சென்று, அங்கு நடைபெற்ற அகழ்வாராய்ச்சி பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.
இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை அரியலூர் அருகே கொல்லாபுரத்தில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களுக்கு சேர்த்து நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, 2 மாவட்டங்களுக்கான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பேசுகிறார்.
சிறப்பான வரவேற்பு
இதற்காக நாளை காலை 11 மணியளவில் திருச்சியில் இருந்து கார் மூலம் புறப்பட்டு பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பெரம்பலூர் மாவட்ட எல்லையான திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூரில் வைத்து பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சரை வரவேற்க பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் திரளாக இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், போக்குவரத்துத்துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர், பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவருமான குன்னம் சி.ராஜேந்திரன் ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளனர்.