பணகுடியில் ரூ.17 லட்சத்தில் பாலம் அமைக்க ஏற்பாடு
பணகுடியில் ரூ.17 லட்சத்தில் பாலம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அதிகாரி ஆய்வு செய்தார்.
பணகுடி:
பணகுடி வாதையம்மன் கோவில் இந்து நாடார் சமுதாயத்திற்கு சொந்தமான இடுகாடு தண்டையார்குளம் கால்வாய்க்கு தெற்கு பக்கம், ரெயில் பாதைக்கு மேற்கே அனுமன் நதிக்கரையில் உள்ளது. இந்த இடத்திற்கு செல்ல சரியான பாதை வசதி இல்லாததால், இறந்தவர்களின் உடலை தண்டையார்குளம் கால்வாயை கடந்து தூக்கி சென்றுதான் அடக்கம் செய்யும் நிலை உள்ளது.
இந்தநிலையில் நமக்கு நாமே திட்டத்தில் ரூ.17 லட்சம் செலவில் தண்டையார்குளம் கால்வாயில் பாலம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதையொட்டி பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பத்மா தண்டையார்குளம் கால்வாயை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணகுடி பேரூராட்சி தலைவர் தனலட்சுமி தமிழ்வாணன், துணைத்தலைவர் சகாய புஷ்பராஜ், செயல் அலுவலர் சுஷ்மா மற்றும் பலர் உடனிருந்தனர்.