குண்டடம் அருகே தொடர் மின்வெட்டைக் கண்டித்து விவசாய சங்கத்தினர் துணை மின்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர் மின் வெட்டு
குண்டடம் அருகே உள்ள மருதூர் துணை மின் நிலையத்திலிருந்து நந்தவனம்பாளையம், எரகாம்பட்டி, பெல்லம்பட்டி, சிங்காரிபாளையம், வெருடேம்பாளையம், உப்பாறுஅணை, காசிலிங்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அடிக்கடி அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் இந்த பகுதியில் விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகளை இயக்குவதில் பாதிப்பு ஏற்பட்டு விவசாய பயிர்களுக்கு முறையாக தண்ணீர் பாய்ச்ச முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
மேலும் இந்தப் பகுதிகளில் செயல்பட்டு வரும் விசைத்தறி கூடங்களும் பாதிக்கப்பட்டன.
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
இதை கண்டித்து நேற்று குண்டடம் அடுத்துள்ள மருதூர் துணை மின் நிலையம் முன்பு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராசு தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சீரான, தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
அவர்களை மின்வாரிய அதிகாரிகள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். சீரான மின்வினியோகம் வழங்குவதாகவும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏர்முனை இளைஞரணி மாவட்ட தலைவர் ஈஸ்வரன், ஜோதிபிரகாஷ், குங்குமம்பாளையம் மயில்சாமி உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.