கன்னியாகுமரியில் இருந்து குஜராத்துக்கு ராணுவ வீராங்கனைகள் இருசக்கர வாகன பேரணி

பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து குஜராத்துக்கு ராணுவ வீராங்கனைகளின் இருசக்கர வாகன பேரணியை மத்திய இணை மந்திரி தொடங்கி வைத்தார்.

Update: 2023-10-05 21:25 GMT

கன்னியாகுமரி:

பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து குஜராத்துக்கு ராணுவ வீராங்கனைகளின் இருசக்கர வாகன பேரணியை மத்திய இணை மந்திரி தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு வாகன பேரணி

பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தை மையமாக கொண்டு "யாஷ்வினி யாத்திரை" என்ற பெயரில் மத்திய ரிசர்வ் காவல் படையை சேர்ந்த 150 பெண் ராணுவ வீராங்கனைகள் பங்கேற்கும் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி கன்னியாகுமரி (தமிழ்நாடு), ஸ்ரீநகர் (காஷ்மீர்), ஷில்லாங் (மேகாலயா) ஆகிய நகரங்களில் இருந்து நேற்று தொடங்கியது. இந்த பேரணி வருகிற 31-ந் தேதி குஜராத் மாநிலம் கவடியாவில் நிறைவடைகிறது.

அதன்படி கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் இருந்து ராணுவ வீராங்கனைகள் பங்கேற்ற பேரணியை மத்திய இணை மந்திரி நாராயணசாமி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் 30 இருசக்கர வாகனத்தில் ராணுவ வீராங்கனைகள் புறப்பட்டனர்.

மாணவிகளுடன் கலந்துரையாடல்

இவர்கள் வழிநெடுகிலும் உள்ள 1000-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், தேசிய மாணவர் படை, வளரிளம் பெண்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தின் தன்னார்வலர்கள் ஆகியோருடன் கலந்துரையாடுகின்றனர். மேலும் மாணவர்கள் இடையே பெண்களின் வலிமை, பெண் உரிமை, நாட்டின் பாதுகாப்பில் பெண்களின் பங்களிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள்.

முன்னதாக கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் கல்லூரி மாணவிகளின் நாட்டுபுற நடனம், யோகா, தேசப்பற்று பாடல், கேரள குழுவினரின் திருவாதிரை களி நடனம் ஆகியவை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியன், விஜய் வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் விஜயதரணி (விளவங்கோடு),எம்.ஆர்.காந்தி(நாகர்கோவில்), மத்திய ரிசர்வ் படை தென்மண்டல இயக்குனர் ஜெனரல் ரவிதீப் சிங் சகி, தமிழ்நாடு இணை ஆய்வாளர் ஜெனரல் தினகரன், கேரள இணை ஆய்வாளர் ஜெனரல் வினோத் கார்த்திக், மாவட்ட சமூகநல அலுவலர் சரோஜினி, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்