சித்தப்பாவை தாக்கிய ராணுவ வீரர் கைது
ஆரணி அருேக சித்தப்பாவை தாக்கிய ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சீனிவாசபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ரத்தினம்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. அவரது சகோதரர் கோவிந்தராஜ். இவரது மகன் ஜெயசூர்யா (வயது 24), ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நிலம் தொடர்பாக அண்ணன்-தம்பிக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்த ஜெயசூர்யா பிரச்சினைக்குரிய இடத்துக்கு சென்று அங்கு இருந்த காணிக்கல்லை பிடுங்கியுள்ளார். தகவல் அறிந்து சக்கரவர்த்தி அங்கு சென்று ஜெயசூர்யாவிடம் ஏன் கல்லை பிடுங்கி போட்டாய் என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ஜெயசூர்யா, சித்தப்பா சக்கரவர்த்தியை ஆபாச வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெயசூர்யாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.