ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: மேலும் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கு யார் யாருக்கு எவ்வளவு பணம் கைமாறியுள்ளது என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Update: 2024-07-12 07:37 GMT

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5 ஆம் தேதி சென்னை பெரம்பூர் பகுதியில் தனது வீடு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆம்ஸ்ட்ராங், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இதனை அடுத்து பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், பொத்தூர் கிராமத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில், கைது செய்யப்பட்டுள்ள 11 பேரை காவலில் எடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்துவரும் நிலையில், 10 நாட்களாக நோட்டமிட்டு ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல், பெரம்பூரில் உள்ள மதுபானக்கடை ஒன்றில் மது அருந்தியபடியே திட்டம் தீட்டியதும், ரத்தம் அதிகளவில் வெளியேறும் நரம்புப் பகுதிகளில் குறிவைத்து வெட்ட வேண்டும், என்றும் மிஸ் ஆகிவிடக் கூடாது என்றும் புன்னை பாலு தனது கூட்டாளிகளிடம் சொன்னதாகவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கு யார் யாருக்கு எவ்வளவு பணம் கைமாறியுள்ளது என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இவ்வழக்கில் மேலும் மூன்று பேரை கைது செய்து விசாரித்து வருகின்றது. பெரம்பூர் பகுதி சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி விசாரணை தொடர்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்