ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : 11 பேருக்கு 5 நாள் போலீஸ் காவல்
7 நாள் கேட்ட நிலையில் 5 நாள் போலீஸ் காவலை வழங்கியது சென்னை எழும்பூர் நீதிமன்றம்.
சென்னை,
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி சென்னை பெரம்பூர் பந்தர்கார்டன் பகுதியில் அவர் புதிதாக கட்டி வரும் வீட்டின் அருகே ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொடூர கொலை தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுவரை 11 பேரை கைது செய்துள்ளனர்.
மேலும், கொலையில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். ஆம்ஸ்ட்ராங்கின் உடல் திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் 7-ம் தேதி நள்ளிரவில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதி அஞ்சலிக்கு தேவையான பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தமிழக அரசின் சார்பில் செய்யப்பட்டது.
இந்தநிலையில் பகுஜன் சமாஜ் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மறைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 11 பேர் சரணடடைந்தனர். இவர்கள் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜய்,சிவசக்தி, ஆகிய 11 பேருக்கு 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க செம்பியம் போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். பாதுகாப்புக் காரணங்களுக்காக காணொலி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அனுமதிக்குமாறு போலீசார் முறையிட்டனர். அதன்படி நீதிமன்றம் இதற்கு அனுமதி அளித்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு காணொலி வாயிலாக இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி தயாளன் முன்பு விசாரணை நடைபெற்றது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திட்டத்தை வகுத்துக்கொடுத்தது யார் என்பது தொடர்பாக தீவிரமாக விசாரிக்க, கைதான 11 பேருக்கும் 5 நாள்கள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.