ஆம்ஸ்ட்ராங் படுகொலை: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கண்டனம்

ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் கொல்லப்பட்டது மிகவும் வருந்தத்தக்கது மற்றும் கண்டனத்திற்குரியது என்று மாயாவதி கூறியுள்ளார்.

Update: 2024-07-05 21:40 GMT

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர் நேற்று மாலை தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இந்த கொடூர தாக்குதலில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங்கை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார்.

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் போலீசில் சரணடைந்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக ஆற்காடு சுரேஷின் சகோதரர் ஆற்காடு பாலு உள்பட 8 பேர் அண்ணாநகர் துணை ஆணையர் முன் சரணடைந்துள்ளனர்.

சரணடைந்த 8 பேரையும் கைது செய்த போலீசார் இந்த கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த கொலை சம்பவத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான கே. ஆம்ஸ்ட்ராங், சென்னையில் அவரது வீட்டின் வெளியே கொடூரமான முறையில் கொல்லப்பட்டது மிகவும் வருந்தத்தக்கது மற்றும் கண்டனத்திற்குரியது. தொழில்ரீதியாக ஒரு வழக்கறிஞரான அவர் மாநிலத்தில் வலுவான தலித் குரலாக அறியப்பட்டார். மாநில அரசு குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்