நாளை அரிமளம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
அரிமளம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நாளை நடக்கிறது.
அரிமளம் மார்க்கெட் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா பங்குனி மாதம் 10-ந் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. இதையடுத்து காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் காலை உற்சவர் மாரியம்மனுக்கு வெள்ளியங்கி சாத்தப்பட்டது. மாலையில் அம்மனுக்கு 11 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று 7-ம் திருவிழா முக்குலத்தோர் சமுதாயம் சார்பில் நடத்தப்பட்டது. இரவு அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிம்ம வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலித்தார். அதனைத் தொடர்ந்து இரவு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு முத்து மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெறுகிறது. நாளைமறு நாள் (செவ்வாய்க்கிழமை) பால்குடம், காவடி, தீமிதித்தல் மற்றும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது. இரவு காப்பு களைத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.