மதநீர் குறைந்ததால் இயல்பு நிலைக்கு திரும்பிய 'அரிக்கொம்பன்' யானை

ஊத்து எஸ்டேட் பகுதியில் சுற்றி திரிந்து வரும் ‘அரிக்கொம்பன்’ யானைக்கு தற்போது மதநீர் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

Update: 2023-09-20 21:31 GMT

அம்பை:

கேரள மாநிலம் மூணாறு மற்றும் தமிழ்நாட்டில் தேனி மாவட்ட மக்களை அச்சுறுத்தி கலங்கடித்த அரிக்கொம்பன் யானையை வனத்துறையினர் பிடித்து லாரியில் ஏற்றி, நெல்லை மாவட்டம் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, மேல் கோதையாறு அணை வழியாக கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதியான முத்துக்குழி வயல் பகுதியில் விட்டனர். அதன் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக கழுத்தில் ரேடார் கருவியும் பொருத்தினர்.

அரிக்கொம்பன் அட்டகாசம்

கடந்த 17-ந்தேதி இரவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட வனப்பகுதியில் 'அரிக்கொம்பன்' யானை திடீரென்று புகுந்தது.

நாலுமுக்கு தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் வீடுகளின் முன்பிருந்த வாழை மரங்களை சாய்த்தும், வாழைத்தார்களை தின்றும் அட்டகாசத்தில் ஈடுபட்டது. தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, யானையின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனர்.

வனத்துறையினர் கண்காணிப்பு

நேற்று முன்தினம் அதிகாலையில் ஊத்து எஸ்டேட் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் அருகில் 'அரிக்கொம்பன்' யானை நிற்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனே வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று பார்த்தனர். ஆனால் அங்கு யானை இல்லை. தொடர்ந்து அம்பை, களக்காடு வனக்கோட்டங்களைச் சேர்ந்த சுமார் 80-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் 'அரிக்கொம்பன்' யானையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

நேற்று அதிகாலையில் 'அரிக்கொம்பன்' யானை ஊத்து எஸ்டேட் பகுதியில் சுற்றி திரிந்ததை வனத்துறையினர் கண்டறிந்தனர். தொடர்ந்து அதனை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இயல்பு நிலைக்கு திரும்பியது

இதுகுறித்து களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகபிரியா கூறியதாவது:-

'அரிக்கொம்பன்' யானை ஊத்து எஸ்டேட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள ஆர்கானிக் தொழிற்சாலை அருகில் நடமாடி வருகிறது. தற்போது அதற்கு மஸ்து எனப்படும் மதநீர் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. நேற்று முன்தினம் இரவு நாலுமுக்கு-ஊத்து சாலை பகுதியில் அடர்ந்த மூடுபனி காணப்பட்டதால் எங்களால் யானையை கண்டுபிடிக்க முடியவில்லை. 'அரிக்கொம்பன்' யானையின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள ரேடார் கருவியில் எந்த பழுதும் இல்லை. தற்போது வரை அந்த ரேடார் கருவி சீரான இயக்கத்திலேயே உள்ளது. யானையை தற்போது நாங்களாக அடர் வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக அதன் நடமாட்டத்தை மட்டுமே கண்காணித்து வருகிறோம்.

உரிய நடவடிக்கை

ஏனெனில் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். அரிக்கொம்பனை விரட்ட முயற்சிக்கும்போது, அது எங்கு செல்வது? என்று தெரியாமல் குடியிருப்புக்குள் புகுந்து விட்டால் ஆபத்தாகி விடும்.

எனவே, அரிக்கொம்பனால் தேயிலை தோட்ட குடியிருப்புவாசிகளுக்கு ஆபத்து ஏதும் ஏற்பட்டு விடாத வகையில், அதுவாகவே தானாக வனத்துக்குள் செல்ல வேண்டிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்