அரிச்சந்திர மகாராஜா கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

விருத்தாசலம் அருகே அரிச்சந்திர மகாராஜா கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-05-20 16:26 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் அடுத்த தே.பவழங்குடி கிராமத்தில் அரிச்சந்திர மகாராஜா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பூசாரிகளாக அதே பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர், சீதாராம் ஆகியோர் இருந்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும், பூசாரிகள் கோவில் கதவை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றனர். பின்னர் நேற்று காலையில் கோவிலை திறக்க வந்தபோது, கோவிலின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த பணத்தை காணவில்லை.

கொள்ளை

பின்னர் இதுபற்றி தகவல் அறிந்ததும், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் கோவிலுக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நள்ளிரவில் கோவில் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஆனால் உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது என்று தெரியவில்லை.

தொடர்ந்து இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கோவிலில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மே மாதம் 20-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்துள்ளது. இந்நிலையில் கும்பாபிஷேகம் நடந்த அதே தினத்தன்று கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்