சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடிக்க முயன்ற ஊழியர்களிடம் தகராறு
சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடிக்க முயன்ற ஊழியர்களிடம் மாட்டின் உரிமையாளர்கள் தகராறில் ஈடுபட்டனர்.
திருச்சி மாநகரில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க மாநகராட்சி சார்பில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக மாடுகளை ஏற்றிச்செல்ல பிரத்யேக வாகனம் வாங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் திருச்சி பொன்நகர் பகுதியில் நேற்று காலை சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் பிடித்துக்கொண்டு இருந்தனர். இதைக்கண்ட மாட்டின் உரிமையாளருக்கும், ஒப்பந்த ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினார். அப்போது ஒரு வாலிபர் தி.மு.க. கவுன்சிலரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த செசன்ஸ் கோர்ட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.