விசாரணைக்கு அழைக்க சென்ற போது வாக்குவாதம்: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கத்திக்குத்து - வாலிபர் கைது
வேளச்சேரியில் விசாரணைக்கு அழைக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
சென்னை வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய காலனியை சேர்ந்தவர் ஷாலினி (வயது 36). இவரது அண்ணன் சதீஷ் (38), அக்காள் வேளாங்கண்ணி, தாய் சாந்தி ஆகியோர் அடிக்கடி ஷாலினியின் வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று குடும்பத்தினர் அங்கு சென்று ஷாலினியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ஷாலினி சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து மருத்துவமனை தரப்பில் வேளச்சேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வேளச்சேரி இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், விசாரணைக்காக சதீஷை போலீஸ்நிலையம் அழைத்து வரும் படி சப்-இன்ஸ்பெக்டர் அருணிடம் கூறி உள்ளார்.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அருண் வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பிற்கு சென்று சதீஷை அழைத்த போது வீட்டில் உள்ளவர்கள் வாக்குவாதம் செய்து உள்ளனர். அப்போது சதீஷ் கத்தியை எடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அருணின் தோள்பட்டைக்கு கீழ் குத்திவிட்டு தப்பியோட முயன்றார். கத்திக் குத்துப்பட்டு ரத்தம் சொட்ட, சொட்ட பொது மக்கள் உதவியுடன் சதீஷை சப்-இன்ஸ்பெக்டர் அருண் பிடித்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் வேளச்சேரி போலீசார் விரைந்து சென்று சதீஷை கைது செய்தனர். படுகாயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.