ரூ.1½ லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது

Update: 2022-08-12 17:31 GMT


பல்லடத்தில் செல்போன் கோபுரம் அமைப்பதாக ஏமாற்றி ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்தை மோசடி செய்த வாலிபரை திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

செல்போன் கோபுரம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பழனிச்சாமியின் மகன் கதிர்வேலு என்பவர் சின்னிய கவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். இவருடைய செல்போன் எண்ணுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், உங்களுடைய காலி நிலத்தில் 5ஜி செல்போன் கோபுரம் அமைக்கப் போவதாகவும், அதற்கு வாடகை பணம் தருவதாகவும் கூறப்பட்டிருந்தது. அந்த எண்ணை தொடர்பு கொண்ட போது முதலில் கொஞ்சம் பணத்தை செலுத்துமாறு கூறியுள்ளனர். இதனை நம்பிய கதிர்வேலு ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்தை அந்த நபரின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.

மீண்டும் அந்த நபர் பணம் செலுத்துமாறு கேட்டுள்ளார். இதனால் கதிர்வேலுக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் இது குறித்து திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் கதிர்வேலு புகார் அளித்தார்.

வாலிபர் கைது

கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணசாமி முன்னிலையில் இன்ஸ்பெக்டர் சித்ராதேவி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ரோஸ்லின் அந்தோணி அம்மாள் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மர்ம ஆசாமியின் செல்போன் எண்ணை கொண்டு துப்பு துலக்கினார்கள். இதில் மோசடியில் ஈடுபட்டது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த செல்வமணி (வயது 24) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து இரண்டு செல்போன்கள், சிம்கார்டுகள் மற்றும் ரூ.37 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்