வாணியம்பாடியில் பகுதி சபை கூட்டம்

வாணியம்பாடியில் பகுதி சபை கூட்டத்தை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.

Update: 2022-11-01 18:23 GMT

வாணியம்பாடியில் பகுதி சபை கூட்டத்தை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.

பகுதி சபை கூட்டம்

வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட புதூர் பகுதியில் சிறப்பு பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா தலைமை வகித்தார். நகரமன்ற தலைவர் உமா சிவாஜிகணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, நகர கூட்டுறவு வங்கி தலைவர் வி.எஸ்.சாரதி குமார், நகராட்சி ஆணையாளர் மாரி செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பகுதி சபா கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

6 முறை நடைபெறும்

தமிழக அரசின் சார்பாக உள்ளாட்சி தினம் கொண்டாடப்படுகிறது. வாணியம்பாடி நகரம் பிரிட்டீஷ் ஆட்சி காலத்திலேயே வணிகத்தில் சிறந்து விளங்கி, வணிகன் பாடியாக இருந்து வாணியம்பாடியாக மாறியுள்ளது. இது இஸ்லாமியர்களும், இந்துக்களும் அண்ணன் தம்பியாக வாழும் ஊர். இந்த தினம் வாணியம்பாடியில் நடைபெறுவது சிறப்புமிக்கது.

திராவிட மாடல் ஆட்சியில் நகர பகுதி சபை தொடங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. நகர்ப்புற மக்களுக்கும், அரசுக்கும் ஓர் பாலமாக அமைய இச்சிறப்பு கூட்டம் ஆண்டிற்கு 6 முறை நடைபெறும். இதற்கு திருப்பத்தூர் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் என்ற முறையிலும், பொதுமக்கள் சார்பிலும் தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் தேவராஜ், நல்லதம்பி, வில்வநாதன், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, மாவட்ட பால்வளத் தலைவர் எஸ்.ராஜேந்திரன், வாணியம்பாடி தாசில்தார் சம்பத் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்