திருக்கோவிலூர் நகராட்சியில் பகுதி சபை கூட்டம் அமைச்சர் பொன்முடி பங்கேற்பு

திருக்கோவிலூர் நகராட்சியில் பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பொன்முடி பங்கேற்றாா்.

Update: 2022-11-01 18:45 GMT


திருக்கோவிலூர், 

கிராம சபை கூட்டங்களை போல நகர உள்ளாட்சி மன்றங்களில் பகுதி சபை கூட்டங்களை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருக்கோவிலூர் நகரசபை அலுவலகத்தில் பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு நகர்மன்ற தலைவர் டி.என்.முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் வக்கீல் எம்.தங்கம், நகர் மன்ற துணை தலைவர் உமா மகேஸ்வரிகுணா, நகராட்சி கவுன்சிலர்கள் ஐ.ஆர்.கோவிந்த், புவனேஸ்வரிராஜா, எஸ்.சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையாளர் கீதா வரவேற்றார்.

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் தான், திருக்கோவிலூர் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு, அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு இருப்பதுடன், அறிவுசார் மையம் கட்டப்பட்டு வருகிறது. நகராட்சிக்கு புதிய அலுவலகமும் கட்டப்பட உள்ளது. இங்கள்ள நடுநிலைப்பள்ளிக்கு ரூ.20 லட்சத்தில் கட்டிடம் கட்டப்படும் என்று பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார்.

அப்போது அங்கு இருந்த பொதுமக்கள், கூட்டமாக சேர்ந்து மழைக்காலம் என்பதால் ஆவியூரான், சித்தேரியன் வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தண்ணீர் தேங்காமல் தடுக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர்.

கூட்டத்தில், நகர தி.மு.க. செயலாளர் ஆர். கோபிகிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.செல்வராஜ், நகர அவைதலைவர் டி.குணா, முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் மணி, மாவட்ட பிரதிநிதி வக்கீல் ச.மருதுசேஷன், முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் எம்.கே.சங்கர், முன்னாள் நகர பொருளாளர் எல்.தங்கராஜ், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் வெங்கட், நகர இளைஞரணி செயலாளர் நவநீதன், நகர மன்றகவுன்சிலர்கள் கந்தன்பாபு, தொ.மு.க. நிர்வாகி டி.கே. சரவணன், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர்கள் வினோபா, சண்முகம், அர்ச்சனாயுகேஷ், துரை, ஜெயந்தி முருகன், உஷா வெங்கடேசன், ராகவன், அண்ணாதுரை, ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்