பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட கவர்னர் தயாரா? - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சவால்
அமைச்சர் பதவி போனாலும் பரவாயில்லை என்றுதான் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.;
சென்னை,
இன்று காலை 9 மணி முதல் தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் நீட் தேர்வை கண்டித்து திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வந்தது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்தனர்.
காலை 9 மணி முதல் 5 மணி வரை நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டம் தற்போது நிறைவடைந்துள்ளது. நிறைவுரையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "நீட் தேர்வினால் நாம் 21 உயிர்களை பறிகொடுத்து இருக்கிறோம். 21 உயிர்கள் போனது நாம் தற்கொலை என பேசிக்கொண்டு இருக்கிறோம். நான் சொல்கிறேன் இந்த 21 தற்கொலையும் தற்கொலை இல்லை, கொலை. இந்த கொலையை செய்தது மத்திய பாஜக அரசு. அந்த கொலைக்கு துணை நின்றது அதிமுக. இதனை நான் திரும்ப திரும்ப சொல்வேன்.
நான் இந்த நீட் தேர்வை பற்றி கடந்த 5 வருடங்களாகவே பேசிவிட்டேன். இனிமேல் நான் பேசுவதற்கும் தயாராக இருக்கிறேன். இந்த நிகழ்ச்சியில் நான் அமைச்சராக பங்கேற்கவில்லை. இந்த நிகழ்ச்சியில் நான் சட்டமன்ற உறுப்பினராக பங்கேற்கவில்லை, ஒரு சாதாரணமான மனிதராக தான் பங்கேற்றுள்ளேன்.
இறந்து போன அந்த 20 குழந்தைகளுடைய அண்ணனாக பேச வந்திருக்கின்றேன் இங்கு உண்ணாவிரத போராட்டத்திற்கு வருகை தந்துள்ள அனைவரும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கலந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நான் இப்போது நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இங்கு மட்டுமில்லை, தமிழகத்தில் பல மாவட்டங்களில் மருத்துவர்கள், மக்கள் என பலரும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டு இருக்கிறீர்கள் அவர்கள் அனைவருக்கும் நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
கவர்னர் ஆர்.என். ரவி நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை அழைத்து பாராட்டுவதற்கு ஒரு கூட்டம் நடத்துகிறார். கிட்டத்தட்ட ஒரு பயிற்சி வகுப்பு மாதிரி நீட் தேர்வுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பயிற்சி வகுப்பு நடத்துகிறார். அதில் வெற்றிபெற்ற ஒரு மாணவருடைய தந்தை கவர்னரிடம் என்னுடைய மகனை நான் எப்படியோ நீட் தேர்வில் வெற்றி பெற வைத்து விட்டேன். நான் வசதியாக இருந்த காரணத்தால் வெற்றிபெற வைத்துவிட்டேன் என்னைப்போல எவ்வளவு பேர் இப்படி செய்யமுடியும்? நீங்கள் நீட் தேர்வை ரத்து செய்யுங்கள் என கூறினார்.
அதற்கு கவர்னர் நான் ஒருபோதும் அதை செய்ய மாட்டேன் என்று திமிராக பேசியுள்ளார். நான் கவர்னரை பார்த்து கேட்கிறேன், நீங்கள் யார்? உங்களுக்கு முதல்-அமைச்சர் சொல்வதை மத்திய அரசிடம் சொல்வது மட்டும் தான் வேலை.
கவர்னருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. தமிழக மக்களைப் பற்றி உங்களுக்கு ஒன்றும் தெரியாது. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழகத்தில் தேர்தலில் நிற்க தயாரா? உங்கள் சித்தாந்தங்கள் இந்த மண்ணில் எடுபடாது. தமிழகத்திற்கு பாஜக என்ற கட்சி தேவையற்றது. பாஜக, அதிமுகவை மக்கள் மன்னிக்கமாட்டார்கள்.
தமிழக மாணவர்கள் சற்று பொறுமை காக்க வேண்டும். நீட் என்பது தகுதியற்ற தேர்வு, நீட் தேர்வை ஒழித்தால் தான் தமிழகத்திற்கு விடியல். நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம் மட்டுமே. டெல்லியில் அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும்.
நீட் தேர்வுக்கு எதிராக இணைந்து டெல்லியில் போராட்டம் நடத்த அதிமுகவிற்கு அழைப்பு விடுக்கிறேன். அதிமுகவினர் எங்களுடன் வாருங்கள், பிரதமர் வீட்டிற்கு முன்பு அமர்ந்து நீட்டுக்கு எதிராக போராடுவோம். ஒன்றாக போராடி நீட் தேர்வு ரத்தானால் அந்த வெற்றியை அதிமுகவே வைத்து கொள்ளட்டும்" என்று கூறினார்.