கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் தொழிலாளர்களுக்கு டிப்ஸ் அவசியமா?

கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் தொழிலாளர்களுக்கு டிப்ஸ் அவசியமா?

Update: 2022-10-07 18:45 GMT

மனிதர்களின் அத்தியாவசிய தேவை பட்டியலில் முக்கியமான இடத்தை கியாஸ் சிலிண்டர் பிடித்துள்ளது என்றால் அது மிகையல்ல. விறகு அடுப்பில் மூச்சு திணறலுடன் சமையல் செய்த காலம் மாறி இந்த நவீன காலத்தில் கியாஸ் அடுப்பில் புகையையே பார்க்காமல் சொகுசாக சமையல் செய்து விடுகிறார்கள், இல்லத்தரசிகள். வெந்நீர் வைப்பதற்கும் கியாஸ் அடுப்பின் உதவியை தான் அவர்கள் நாடுகிறார்கள்.

இப்படி இல்லத்தரசிகளின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக மாறிய கியாஸ் சிலிண்டர்களின் விலையோ மாதம்தோறும் உயர்ந்து கொண்டே செல்கிறது. 500 ரூபாய்க்கு கீழ் இருந்த சிலிண்டர் விலை தற்போது ஆயிரம் ரூபாயை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த மாதம் ஒரு கியாஸ் சிலிண்டரின் விலை 1,140 ஆகும். வர்த்தக கியாஸ் சிலிண்டர் ஒன்று ஆயிரத்து 845-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே மாதம்தோறும் விலை உயர்த்தி வருவதால் இல்லத்தரசிகள் கவலை தெரிவித்த நிலையில் கியாஸ் சிலிண்டரை வீட்டுக்கு கொண்டு வந்து வினியோகம் செய்யும் தொழிலாளர்களுக்கும் அதிகமாக டிப்ஸ் கொடுக்க வேண்டி உள்ளது என்றும் இல்லத்தரசிகள் குற்றம் குமுறுகிறார்கள். இவ்வாறு டிப்ஸ் கொடுப்பது அவசியமா? என்ற கேள்வியும் எழுப்பியுள்ளனர்.

டிப்ஸ் அவசியமா?

இதுபற்றி நாகர்கோவில் பார்வதிபுரத்தை சோ்ந்த யுஜின் வனஜாவிடம் கேட்டபோது கூறியதாவது:-

நாங்கள் எல்.பி.ஜி. கியாஸ் பயன்படுத்தி வருகிறோம். செல்போன் மூலம் முன்பதிவு செய்த மறுநாளே சிலிண்டர் வீட்டுக்கு வந்து விடும். மாடி வீட்டில் வசிப்பதால் கியாஸ் சிலிண்டர் கொண்டு வரும் தொழிலாளிக்கு நாங்களாகவே 20 அல்லது 30 ரூபாய் டிப்சாக கொடுப்போம். ஆனால் அதே சமயம் பல இடங்களில் கியாஸ் சிலிண்டர் கொண்டு வந்து கொடுப்பதற்கு வாடிக்கையாளர்களிடம், தொழிலாளர்கள் கட்டாயம் டிப்ஸ் தர வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். ஏற்கனவே கியாஸ் சிலிண்டர் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. அப்படி இருக்க இந்த டிப்ஸ் அவசியமா?. எனவே டிப்ஸ் கலாசாரம் தவிர்க்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புல்லுவிளையை சேர்ந்த லலி இதழ் கூறியதாவது:-

கியாஸ் சிலிண்டர் கொண்டு வரும் தொழிலாளர்களுக்கு டிப்ஸ் கொடுக்கும் முறை பழக்கமாகி விட்டது. இதனால் சிலிண்டர் கொண்டு வந்தாலே 40 ரூபாய் வரை டிப்ஸ் கொடுத்து வருகிறோம். கியாஸ் சிலிண்டர் விலை ஏறுமுகமாகவே இருக்கும் நிலையில் டிப்ஸ் கொடுக்கும் முறையை தவிர்ப்பது நல்லது.

இவ்வாறு அவர் கூறினார்

வாக்குவாதம் செய்ய மாட்டோம்

பழவிளையை சேர்ந்த சுதன் கூறியதாவது:- நான் 12 ஆண்டுகளாக கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்து வருகிறேன். தினமும் டெம்போவில் சிலிண்டர்களை கொண்டு சென்று வீடுகளில் வழங்குவோம். சிலிண்டர் காலியானதும் முன்பதிவு செய்த பிறகு இல்லத்தரசிகள் எங்களை தான் செல்போனில் தொடர்பு கொண்டு சிலிண்டர் எப்போது வரும்? என்று கேட்பார்கள். பல ஆண்டுகள் வேலை பார்ப்பதால் வாடிக்கையாளர்களுடன் நல்ல பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால் வீட்டில் சிலிண்டரை கொண்டு சென்று இறக்கியதுமே அவர்களாகவே டிப்ஸ் தருவார்கள். நாங்களாக கேட்க மாட்டோம். ஏனெனில் எங்களுக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும். அதுவே எங்களது குடும்ப செலவுக்கு போதுமானதாக உள்ளது. இதனால் டிப்ஸ் கேட்க வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது.

எனினும் வாடிக்கையாளர்கள் தாங்களாகவே முன்வந்து 30 ரூபாயில் இருந்து 50 ரூபாய் வரை டிப்ஸ் தருவார்கள். அதை நாங்கள் பெற்றுக் கொள்வோம். கட்டாயம் தர வேண்டும் என்று யாரிடமும் வாக்குவாதம் செய்ய மாட்டோம்.

2 ஆயிரம் தொழிலாளர்கள்

பணிக்கன்குடியிருப்பை சேர்ந்த குணசேகரன் கூறியதாவது:- குமரி மாவட்டத்தில் கியாஸ் சிலிண்டர் வினியோக தொழிலில் சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். நாங்கள் மாதத்துக்கு ஆயிரம் கியாஸ் சிலிண்டர் வரை வினியோகம் செய்து வருகிறோம். எனக்கு மாதம் ரூ.20 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கிறது. இதனால் வாடிக்கையாளர்களிடம் நாங்கள் எந்த டிப்சும் கேட்பதில்லை. ஆனால் நாங்கள் வலுக்கட்டாயமாக டிப்ஸ் கேட்பதாக கூறுகிறார்கள்.

அது மட்டுமல்லாது மாடிகளில் சிலிண்டரை கொண்டு செல்ல தனியாக கட்டணம் வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. ஒருவேளை சரியாக சம்பளம் கிடைக்காத தொழிலாளர்கள் அவ்வாறு டிப்ஸ் கேட்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் சம்பளம் குறைவாக இருப்பதால் வாடிக்கையாளர்களிடம் டிப்ஸ் வாங்கி குடும்பத்தை நடத்த வேண்டிய கட்டாயம் இருக்கும். ஆனால் எல்லா தொழிலாளர்களும் டிப்ஸ் கேட்பதில்லை. நாங்கள் பணிபுரியும் ஏஜென்சியில் எங்களுக்கு வருங்கால வைப்பு நிதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

------

படங்கள் உண்டு

----

Tags:    

மேலும் செய்திகள்