மாட்டுத்தாவணி பூ, காய்கறி மார்க்கெட்டுகளில் அடிப்படை வசதி உள்ளதா? -வக்கீல் கமிஷனர் ஆய்வு செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

மாட்டுத்தாவணி பூ, காய்கறி மார்க்கெட்டுகளில் அடிப்படை வசதி உள்ளதா? என்று வக்கீல் கமிஷனர் ஆய்வு செய்யும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-06-23 01:15 GMT


மாட்டுத்தாவணி பூ, காய்கறி மார்க்கெட்டுகளில் அடிப்படை வசதி உள்ளதா? என்று வக்கீல் கமிஷனர் ஆய்வு செய்யும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

காய்கறி, பூ மார்க்கெட்

மதுரையை சேர்ந்த பொழிலன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- மதுரை மாட்டுத்தாவணியில் காய்கறி சந்தை மற்றும் பூ மார்க்கெட் ஆகியவை உள்ளன. காய்கறி சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த வியாபார கடைகள், சில்லறை வியாபார கடைகள் செயல்படுகின்றன. நாள்தோறும் இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

இதேபோல பூ மார்க்கெட்டிலும் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. பகல், இரவு என எந்நேரமும் மக்கள் வந்து செல்லும், இந்த மார்க்கெட்டுகளில் குடிநீர், கழிப்பறை, வாகன நிறுத்தம் என்பது உள்ளிட்ட மக்களுக்கான எந்த அடிப்படை வசதிகளும் கிடையாது.

இதனால் மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் பல்வேறு அசவுகரியங்களுக்கு ஆளாகின்றனர். எனவே மக்களின் வசதிகளை கருத்தில் கொண்டு, காய்கறி மற்றும் பூ மார்க்கெட்டில் அடிப்படை வசதிகளை செய்து தர உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

வக்கீல் கமிஷனர் நியமனம்

இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா, மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதி சுப்பிரமணியன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மாட்டுத்தாவணி பூ மார்க்கெட், காய்கறி மார்க்கெட்டில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளன என்றார்.

ஆனால் மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் அழகுமணி ஆஜராகி, இந்த மார்க்கெட்டுகளில் அரசு வக்கீல் தெரிவிப்பதைப்போல எந்த வசதிகளும் இல்லை. இதுதொடர்பாக நேரில் ஆய்வு செய்தால் தெரியவரும் என்றார்.

இதனையடுத்து நீதிபதிகள், மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட், காய்கறி மார்க்கெட்டுகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய வக்கீல் கமிஷனர் நியமித்து உத்தரவிட்டனர். சம்பந்தப்பட்ட இடங்களில் ஆய்வு செய்து அதுதொடர்பாக வக்கீல் கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்யும்படியும் நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்