செஞ்சி அரசு கல்லூரியில் போதிய வசதிகள் உள்ளதா?

செஞ்சி அரசு கல்லூரியில் போதிய வசதிகள் உள்ளதா? என்று அமைச்சர் மஸ்தான் ஆய்வு செய்தாா்.

Update: 2022-06-26 17:12 GMT

செஞ்சி:

செஞ்சியில் அரசு கலை கல்லூரி இல்லாததால், இந்த பகுதியை சேர்ந்த மாணவர்கள், திண்டிவனம், விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற பகுதிகளுக்கு சென்று படித்து வருகின்றனர். எனவே செஞ்சியில் அரசு கலை கல்லூரி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற அமைச்சர் செஞ்சி மஸ்தான், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மூலம் நடவடிக்கை மேற்கொண்டார்.

அதன்படி செஞ்சியில் அரசு கலை கல்லூரி தொடங்க அரசாணை வெளியிடப்பட்டது. இந்த கல்லூரியில் இந்த ஆண்டிலேயே மாணவர் சேர்க்கை நடத்தவும், கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டும் வரை செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தற்காலிகமாக இயங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் 2022-23-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையும் கடந்த 22-ந் தேதி தொடங்கியது. இதற்காக அடுத்த மாதம்(ஜூலை) 7-ந் தேதி வரை இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்காலிக கல்லூரி செயல்படுவதற்கு தேவையான கட்டிட வசதி, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதி உள்ளதா? என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது செஞ்சி கல்வி மாவட்ட அலுவலர் கலைவாணி, செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி் மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்