மணல் அள்ளும் பணியில் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனரா?
மணல் அள்ளும் பணியில் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனரா? சமூக வலைதளத்தில் புகைப்படம் வைரலானது.
புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் சிலரை மணல் அள்ளும் பணியில் ஈடுபடுத்தியதாக, அந்த மாணவர்கள் மணல் அள்ளுவதை போன்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது. கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு பள்ளி வளாகத்தில் மாணவர்கள் 15-க்கும் மேற்பட்டவர்கள் எம்.சாண்ட் மணலை அள்ளி அதன் அருகே வைத்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து சிலர் பதிவிட்டுள்ளனர். அரசு பள்ளிகளிலேயே குழந்தைகளை தொழிலாளர்களை போன்று நடத்தும் பள்ளியின் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருக்கின்றனர். இது குறித்து, கல்வித்துறை வட்டாரத்தில் கேட்ட போது, ``பள்ளி வளாகத்தில் மரம், செடிகளுக்கு கட்டிடம் வேலை செய்யும் பணியாட்கள் மாலையில் சென்று விட்டதால், குறைவாக இருந்த எம்.சாண்ட் மணலை பள்ளியில் உள்ள சில மாணவர்களை வைத்து அங்குள்ள செடிகளுக்கு அள்ளி போட்டுள்ளனர்'' என தெரிவித்தனர். மாணவர்களை மணல் அள்ளும் பணியில் ஈடுபடுத்தியது தவறுதான் எனவும் ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.