அந்தியூரில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

Update: 2023-03-11 21:18 GMT

அந்தியூரில் விபத்துகளை தடுக்க சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

போக்குவரத்து நெரிசல்

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய விவசாய பகுதியாக அந்தியூர் விளங்குகிறது. இதனால் இங்கிருந்து விவசாய விளைபொருட்கள் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி அந்தியூரில் இருந்து பர்கூர் மலைப்பகுதி வழியாக சென்றால் கர்நாடக மாநிலத்துக்கு சென்றுவிடலாம்.

மேலும் அந்தியூரில் வாரச்சந்தை, கால்நடை சந்தை, தாலுகா அலுவலகம், அரசு ஆஸ்பத்திரி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு கலைக்கல்லூரி போன்றவை உள்ளன. இதன்காரணமாக அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்து செல்கிறார்கள். எனவே அந்தியூருக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் அந்தியூர் பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டே இருக்கும்.

சாலையோர ஆக்கிரமிப்புகள்

குறிப்பாக அந்தியூர் ரவுண்டானா பகுதி வாகன போக்குவரத்து நிறைந்த இடமாக காணப்படுகிறது. அதுமட்டுமின்றி அந்தியூரில் உள்ள சத்தியமங்கலம் ரோடு, பவானி ரோடு, பர்கூர் ரோடு, ஆப்பக்கூடல் ரோடு போன்ற ரோடுகள் வாகன போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலைகளாக உள்ளன.

இவ்வளவு போக்குவரத்து நெரிசல் உள்ள அந்தியூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளும் பெருகிவிட்டன. இதன்காரணமாக அந்தியூரில் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே சாலைகளில் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தியூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது குறித்து அவர்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-

அகற்ற வேண்டும்

சமூக ஆர்வலர் எஸ்.ஜி.சண்முகானந்தம்:-

அந்தியூர் கனரா வங்கி முன்பு ரோட்டின் பாதி அளவுக்கு சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. வர்த்தக நிறுவனங்களின் விளம்பர பலகைகளை சாலையோரம் வைப்பதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனால் அந்தியூர் ரவுண்டானா பகுதியில் வாகனங்களை திருப்ப முடியாமல் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதன்காரணமாக அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர் சேதங்கள் ஏற்படுகின்றன. கடந்த 10 நாட்களில் மட்டும் 4 பேர் விபத்துகளால் உயிரிழந்து உள்ளனர். மேலும் வாகனங்களை ஆங்காங்கே சாலையோரங்களில் நிறுத்தி விடுகின்றனர். இதனால் சாலைகள் மிகவும் குறுகலாக காணப்படுவதுடன், மற்ற கனரக வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் ஈரோட்டில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு அந்தியூர் வழியாக தினமும் சரக்கு வாகன போக்குவரத்து இரவு, பகலாக நடைபெற்று வருகிறது. எனவே அந்தியூர் பகுதியில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்ற வேண்டும்.

விபத்து

அந்தியூர் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் சன்ரைஸ் சிவக்குமார்:-

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு அந்தியூர், பர்கூர் மலைப்பகுதி வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக சத்தியமங்கலம் வழியாக மைசூரு சென்று கொண்டிருந்த வாகனங்கள் அனைத்தும் தற்போது அந்தியூர், பர்கூர் மலைப்பாதை வழியாக செல்கின்றன. இதனால் முன்பைவிட வாகன போக்குவரத்து அதிகரித்து விட்டது. ஆனால் சாலையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் காரணமாக அந்தியூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

வெள்ளை கோடுகளை தாண்டி...

பாசம் தொண்டு நிறுவனத்தின் தலைவர் பாசம் மூர்த்தி:-

அந்தியூர் தவுட்டுப்பாளையம் பகுதியில் போக்குவரத்து சீர் செய்ய ரோட்டின் நடுவில் தடுப்பு சுவர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த தடுப்பு சுவரில் பல்வேறு விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. இதனால் இரவு நேரங்களில் சாலைகளில் வரும் வாகனங்களுக்கு தடுப்பு சுவர் இருப்பது தெரியாமல் அதில் மோதி விபத்துகள் ஏற்படுகின்றன. அதுமட்டுமின்றி தடுப்பு சுவரில் ஒட்டப்பட்டு உள்ள விளம்பர போஸ்டர்களை சில வாகன ஓட்டிகள் படித்துக்கொண்டே வாகனங்கள் ஓட்டுவதாலும் விபத்துகள் ஏற்படுகின்றன.

எனவே தடுப்பு சுவரில் விளம்பர போஸ்டர்கள் ஒட்ட அதிகாரிகள் அனுமதிக்க கூடாது. மேலும் அந்த தடுப்பு சுவரில் இரவு நேரங்களில் ஒளிரக்கூடிய ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும். சாலையோரம் போடப்பட்டு உள்ள வெள்ளை கோடுகளை தாண்டி ரோட்டை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்துவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும். பொதுமக்களின் நலன் கருதி சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றினால் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க முடியும்.

சாலையோரத்தில் லாரிகள்

வக்கீல் ஜாகீர் உசேன்:-

அந்தியூர் அரசு ஆஸ்பத்திரி பகுதி, தேர் வீதி, ராஜ வீதி ஆகிய பகுதிகளில் அதிக போக்குவரத்து காணப்படுகிறது. ஆனால் அந்த பகுதிகளில் லாரிகளை சாலையோரத்தில் நிறுத்தி விடுகின்றனர். இதனால் அந்த பகுதியில் இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதுபோல் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரி பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்த பகுதியில் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவேண்டும். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்