இலவசங்கள் அவசியமா?

இலவசங்கள் அவசியமா? என்பது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

Update: 2022-10-29 18:13 GMT

தமிழ்நாட்டில் இலவசங்களுக்கு பஞ்சம் இல்லை. அதனால்தான் நாட்டில் பஞ்சமும் இல்லை என்கிறார்கள் சிலர்.

இன்னும் சிலரோ இல்லாதவர்களுக்குத்தான் இலவசம். எல்லோருக்கும் இலவசம் என்பதை ஏற்க முடியாது. அது அரசுக்கு இழப்பை ஏற்படுத்துவதுடன், நம்மவர்களை சோம்பேறி ஆக்குகிறது என்கிறார்கள்.

உயிர் ஆதாரம்

இருந்தாலும் கொரோனா காலங்களில் வாழ்வாதாரங்களை இழந்து தவித்த அப்பாவி மக்களுக்கு உயிர் ஆதாரங்களாய் இருந்தது இலவசங்கள் என்பதை கண்கூட காண முடிந்தது.

பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளுக்கு இலவச உணவு, இலவச சீருடை, இலவச புத்தகங்கள், இலவச சைக்கிள்கள், இலவச மடிக்கணினிகள், ஏழை பிள்ளைகளின் படிப்புக்கு உதவித்தொகை, அரசு ஆஸ்பத்திரிக்கு இலவச சிகிச்சை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், இலவச வீடு, இலவச அரிசி, இலவசமாக சமையல் கியாஸ் இணைப்பு, கோவில்களில் அன்னதானம் என்றெல்லாம் வழங்கப்பட்டு வருவதை வெறுமனே இலவசங்கள் என்று எளிதாக சொல்லிவிடவோ, புறம் தள்ளிவிடவோ முடியாது.

இருந்தாலும் மீனை கொடுப்பதைவிட, தூண்டிலை கொடுத்து மீன்பிடிக்க கற்றுக்கொடுப்பதே சிறந்தது என்று கூறுவது உண்டு.

பிரதமர் நரேந்திரமோடி எதிர்ப்பு

இந்த இலவசங்கள் தமிழ்நாட்டில் மட்டும் அல்ல. ஏதோ ஒரு வடிவில் எல்லா மாநிலங்களிலும் சில இருக்கத்தான் செய்கின்றன.

இந்த நிலையில் மாநில அரசுகளின் இலவச திட்டங்களுக்கு எதிராக பிரதமர் நரேந்திரமோடி, தனது கருத்தை வலுவாக பதிவு செய்து இருக்கிறார். இலவச திட்டங்கள் வரி செலுத்துகிறவர்களுக்கு வலியை தருகின்றன என்று வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தேர்தலின்போது வாக்காளர்களை கவர்வதற்காக இலவச திட்டங்களை அறிவிக்கும் கலாசாரம் வளர்ந்து வருகிறது. இலவச திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஆபத்து. இந்த மோசமான கலாசாரத்தை மக்கள் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். இந்திய அரசியலில் இருந்து இலவச திட்ட கலாசாரம் வேரறுக்கப்பட வேண்டும் என்றும் அவர் உறுதிபட கூறி இருக்கிறார்.

இதுபற்றி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்ப்போம்.

மக்களின் வரிப்பணம்

தனியார் பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியை சுசீலா தேவி:- ''தேர்தல் நேரத்தில் இலவச திட்டங்களை அரசியல் கட்சியினர் தங்கள் ஆதாயத்திற்காக அறிவிக்கின்றனர். அறிவித்ததில் சிலவற்றை மட்டும் நிறைவேற்றுகின்றனர். பெரும்பாலானவை நிறைவேற்றப்படுவதில்லை. எந்தவொரு இலவச திட்டங்களுக்கும் மக்களின் வரிப்பணம் தான் பயன்படுத்தப்படுகிறது. தற்போது எல்லாவற்றிற்கும் வரி என்ற நிலையில் மக்களின் பணம் வரியாக அரசிற்கு குறிப்பிட்ட தொகை செல்கிறது. இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படும் போது அந்த திட்டத்திற்கான தொகை எவ்வளவு? மக்களின் வரிப்பணத்தில் இருந்து எடுக்கப்பட்ட தொகை எவ்வளவு? அரசு தன்னுடைய பங்களிப்பாக செலுத்திய தொகை எவ்வளவு? என்பதை ஒருபோதும் தெரிவித்ததில்லை.

இந்த தொகையை தெரிவித்தாலே மக்கள் இலவசங்கள் வேண்டாம் எனக்கூறி விடுவார்கள். சாதாரண குடும்பத்தினருக்கு இலவச திட்டங்கள் தேவை தான். அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், அவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்தினாலே பயனுள்ளதாக இருக்கும். ரேஷன் கடைகளில் பொருட்கள் பல இலவசமாக கொடுப்பதாக கூறுகிறார்கள். அந்த பொருட்கள் பல பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. தற்போது நான் துவரம் பருப்பினை ரேஷன் கடையில் வாங்க சென்றேன். ஆனால் அந்த பருப்பு நன்றாக இல்லை. அதே பொருளை நான் கடையில் காசு கொடுத்து வாங்கும் போது நல்ல தரமான பொருளை வாங்க முடிகிறது. மக்களின் வரிப்பணத்தில் கொடுக்கப்படும் இலவசங்கள் சில எனக்கு முழுமையாக வந்து சேர்வதில்லை. அதனால் நான் பயனடையவும் முடியவில்லை. என்னை பொறுத்தவரை இலவசங்கள் என்பது தேவையில்லை'' என்றார்.

முறைகேட்டிற்கு வழி வகுக்கிறது

சமூக ஆர்வலர் தினகரன்:- ''நாடு சுதந்திரம் அடைந்த போது வளர்ச்சிக்காக இலவச திட்டங்கள் இருந்தன. தற்போது சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆன பின்பும் இலவச திட்டங்கள் என்பது மக்களை இன்னும் வறுமை கோட்டிற்கு கீழ் வைத்துள்ளதை காண்பிக்கிறது. தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக இலவச திட்டங்களை அறிவிக்கின்றனர். ஆனால் இந்த இலவச திட்டங்கள் முறைகேட்டிற்கு வழி வகுக்கிறது. இலவச திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைவதில்லை. இலவச திட்டத்தை தொடர்ந்து இன்னும் செயல்படுத்தி கொண்டே இருப்பது வேதனை அளிக்கிறது.

மக்களை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லக்கூடிய திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். அனைவருக்கும் ஒரே மாதிரியான இலவச கல்வி என்பது அவசியம். இதேபோல மருத்துவ சேவையும் முழுமையாக இலவசமாக கிடைக்க வேண்டும். கல்வியும், மருத்துவமும் தான் இலவசத்தின் அத்தியாவசியமாகும்'' என்றார்.

விவசாயம், கல்விக்கு இலவசம் தரலாம்

விராலிமலை ஒன்றியம், களமாவூரை சேர்ந்த இல்லத்தரசி வெண்ணிலா:- தமிழகத்தில் அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக தேர்தல் நேரங்களில் வாக்காளர்களுக்கு இலவசங்களை அறிக்கையாக கொடுத்து பின்னர் அந்த இலவசங்களை வழங்க முடியாமல் கடன் சுமையால் திணறுகின்றன. இன்று இலங்கை போல் நாளை தமிழகத்திலும் பொருளாதார சிக்கல்கள் ஏற்படலாம். கல்வி, மருத்துவம், விவசாயம் இந்த மூன்றையும் தவிர மற்ற எந்த துறையிலும் இலவச திட்டங்கள் இருக்கக்கூடாது. தற்போது இருப்பதால் தான் உழைத்த மனிதன் இன்று சோம்பறியாகவும் மாறியுள்ளான். தமிழகத்தின் இன்றைய கடன் சுமையும் ஏறியுள்ளது. நமது நாட்டின் முதுகெலும்பு விவசாயம் ஆகும். ஆகவே விவசாயம், கல்வி, மருத்துவம் ஆகியவற்றிற்கு இலவசம் கொடுத்து நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடலாம். மற்றவை தேவையற்றது என்று நான் நம்புகிறேன்.

அரசின் கடன் சுமை கூடுகிறது

அறந்தாங்கி எரிச்சி சிதம்பர விடுதியை சேர்ந்த கரிகாலன்:- இலவசங்களால் பொதுமக்களுக்கு எந்த பயனும் இல்லை. இலவசமாக தருவதால் அரசின் கடன் சுமை கூடுகிறது. வரி, விலை வாசி கூடுகிறது. இதனால் இலவசங்களை தவிர்த்துவிட்டு வேலைவாய்ப்பு உருவாக்கலாம், விலை வாசி உயர்ந்து செல்வதை கட்டுப்படுத்தலாம். இலவசம் என்ற பெயரில் பொதுமக்களை சோம்பேறி ஆக்குகின்றனர். வாக்கு வாங்கவே இலவசங்கள் அறிவிக்கப்படுகிறது. இனிவரும் காலத்தில் இலவசங்கள் இல்லாமல் இருந்தால் பொதுமக்களுக்கு நல்லது என்றார்.

முற்றிலும் ஓழிக்க வேண்டும்

ஆலங்குடியை சேர்ந்த சமூக ஆர்வலர் பாஸ்கரன்:-

தேர்தல் வாக்குறுதியில் அனைத்து கட்சியினரும் இலவசங்கள் குறித்து தேவையில்லாத வாக்குறுதிகளை மக்களுக்கு வாரி வழங்கி மக்களை ஏமாற்றம் அடைய செய்கின்றனர். இதை போக்கும் வகையில் நாட்டில் தேர்தல் ஆணையம் இதற்கு தடைவிதிக்க வேண்டும். வழங்கப்படும் இலவசங்களை முறையாக கையாள்வதில்லை. குறிப்பாக நாட்டில் வழங்கும் இலவச திட்டங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்றார்.

அரசின் வளர்ச்சிக்கு...

அகில இந்திய கட்டுனர் சங்க புதுக்கோட்டை மாவட்ட தலைவர் அரவிந்த்:- தமிழக அரசின் இலவச திட்டங்கள் மக்களுக்கான திட்டங்கள். இலவச திட்டங்களின் பயன் இல்லாதவர்களுக்கு தான் தெரியும். மேலும் ஏழை மக்களின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். மக்களின் வரிப்பணம் மக்களுக்காகவே பயன்படுகிறது. அரசின் வளர்ச்சிக்கும் இது உதவுகிறது என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்