காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறப்படுகிறதா?

மசினகுடி பகுதியில் உள்ள தனியார் மதுக்கூடங்களில் காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறப்படுகிறதா? என கலெக்டர் அம்ரித் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-06-24 15:11 GMT

கூடலூர், 

மசினகுடி பகுதியில் உள்ள தனியார் மதுக்கூடங்களில் காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறப்படுகிறதா? என கலெக்டர் அம்ரித் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கலெக்டர் திடீர் ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் இயற்கை அழகை பாதுகாக்கும் வகையில் பல்வேறு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. இந்தநிலையில் வனம் மற்றும் வனவிலங்குகள் பாதிக்கப்படாமல் இருக்க காலி மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை பொது வெளியில் கொட்ட தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி, நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியார் மதுக்கடைகளில் காலி மதுபாட்டில்கள் திரும்ப வாங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி மசினகுடி பகுதியில் உள்ள தனியார் மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடங்களில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்கள் முறையாக திரும்ப பெறப்படுகிறதா? என மாவட்ட கலெக்டர் அம்ரித் நேற்று முன்தினம் திடீரென நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வனம் மற்றும் பொதுவெளிகளில் காலி மதுபாட்டில்கள் வீசப்பட்டு உள்ளதா என பார்வையிட்டார்.

முறையாக செயல்படுத்த வேண்டும்

அப்போது கடை உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலெக்டரிடம் விளக்கம் அளித்தனர். இதை உறுதி செய்யும் வகையில் காலி மதுபாட்டில்கள் வைக்கப்பட்டு உள்ள இடங்களுக்கு சென்று கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் பாட்டில்களை பாதுகாப்பான முறையில் உடனுக்குடன் அகற்ற வேண்டும். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் காலி மதுபாட்டில்கள் வாங்கும் திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

ஆய்வின்போது ஊட்டி ஆர்.டி.ஓ. துரைசாமி, கலால் உதவி ஆணையர் மற்றும் டாஸ்மாக் மேலாளர் சேகர், தாசில்தார் ராஜசேகர் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர். தொடர்ந்து கலெக்டர்அம்ரித் மசினகுடி பகுதியில் ஆய்வு பணி மேற்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்