அரவை கொப்பரை தேங்காய் கொள்முதல் காலம் 30-ந்தேதி வரை நீட்டிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் அரவை கொப்பரை தேங்காய் கொள்முதல் காலம் 30-ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-03 16:58 GMT


திருவாரூர் மாவட்டத்தில் அரவை கொப்பரை தேங்காய் கொள்முதல் காலம் 30-ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென்னை சாகுபடி

திருவாரூர் மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. நெற்பயிருக்கு அடுத்தப்படியாக உளுந்து, பச்சை பயறு மற்றும் பருத்தி பயிரிடப்படுகிறது. மேலும், தென்னை 5,850 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

டெல்டா மாவட்டங்களிலும் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் அரவை கொப்பரை தேங்காய் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு நிறுவனத்தின் மூலமாக மத்திய அரசால் குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

கொள்முதல் காலம் நீட்டிப்பு

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி ஜூலை வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது மத்திய அரசு அரவை கொப்பரை தேங்காய் கொள்முதல் காலத்தை வருகிற 30-ந் தேதி(வெள்ளிக்கிழமை) வரை நீட்டித்து அனுமதி வழங்கியுள்ளது. திருத்துறைப்பூண்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலமாக அரவை கொப்பரை தேங்காய் அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு ரூ.105.90 என கொள்முதல் செய்யப்படுகிறது.

கொப்பரை தேங்காய்

கொள்முதலுக்கு கொண்டு வரப்படும் அரவை கொப்பரை தேங்காய் ஈரப்பதம் 6 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும் என விற்பனைக்குழு அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது நில சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் திருத்துறைப்பூண்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளாரை அணுகி பதிவு செய்து தங்களது அரவை கொப்பரை தேங்காயை விற்பனை செய்யலாம்.

இதற்கான பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவித்து கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலர்களான விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ்-9500787325, இளநிலை உதவியாளர் ரஜினிகாந்த-9751382820, அலுவலக உதவியாளா குமரன்-8508261175 ஆகியோரின் செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம். எனவே இதனை தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்