அரங்குளநாதர்-பெரியநாயகி அம்பாள் கோவில் தேரோட்டம்
திருவரங்குளம் அரங்குளநாதர், பெரியநாயகி அம்பாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் தேரை சிவ... சிவ... ஹரஹர கோஷத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனா்.
திருவரங்குளம்:
அரங்குளநாதர் கோவில்
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை. இதையடுத்து இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. தொடர்ந்து சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிங்க வாகனம், காளை, வெள்ளி குதிரை, காமதேனு, அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடந்து வந்தது.
சிறப்பு அபிஷேகம்
இதைதொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக சுவாமி-அம்பாளுக்கு மஞ்சள், சந்தனம், களபம், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 9 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி-அம்பாளுக்கு பட்டாடை உடுத்தி, தங்க-வைர ஆபரணங்கள் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் ஒரு தேரிலும், மற்றொரு தேரில் பெரியநாயகி அம்பாளும் எழுந்தருளினர்.
சிவ...சிவ... ஹரஹர கோஷம்
ெதாடா்ந்து கோவில் வழக்கப்படி கோவில் மேற்பார்வையாளர், கோவில் மண்டகப்படிதாரர்கள், கோவில் ஊழியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் முக்கிய பிரமுகர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கோவில்பட்டி தேர் வடம் தொடும் வகையறாவினர் விரதமிருந்து வெண் குடை பிடித்து தாரை தப்பட்டை வாணவேடிக்கையுடன் ஊர்வலமாக வந்து கோவிலில் தரிசனம் செய்துவிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதனையடுத்து காலை 10.30 மணிக்கு பக்தர்கள் தேர்களை வடம் பிடித்து இழுத்தனர். தேர் பக்தர்கள் கூட்டத்தில் சிவ...சிவ..., ஹரஹர கோஷத்துடன் அசைந்தாடி வந்தது. அம்பாள் தேரை அதிகளவில் பெண்கள் இழுத்து வந்தனர்.
அப்போது சிவனடியார்கள் தேருக்கு முன்பாக தேவாரம், திருவாசகம் பாடி வந்தனர். தேரை பக்தர்கள் நான்கு வீதிகள் வழியாக இழுத்து வந்து கோவில் நிலையை மதியம் 12.30 மணிக்கு வந்தடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேேராட்டத்தின் போது பக்தர்களுக்கு பானகம், மோர், சர்க்கரை பொங்கல் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.
அரிமளம்
அரிமளம் ஒன்றியம், நெடுங்குடி கிராமத்தில் பிரசன்ன நாயகி சமேத கைலாசநாதர் கோவில் திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகர், வள்ளி தெய்வானை முருகன், சோமாஸ்கந்தர், சண்டிகேஸ்வரர் மற்றும் பிரசன்ன நாயகி சமேத கைலாசநாதர் ஆகிய சுவாமிகள் எழுந்தருளினர். பின்னர் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் மு்க்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் இழுத்து வந்து கோவில் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.