சுகாதாரமான அங்காடியாக மாறுமா ஆரம்பாக்கம் மீன் மார்க்கெட்; ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

கும்மிடிப்பூண்டி அருகே நோய் பரப்பும் வகையில் கொசு உற்பத்தி மையமாக மாறியுள்ள ஆரம்பாக்கம் மீன் மார்க்கெட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2022-10-03 12:24 GMT

மீன்மார்க்கெட்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்து உள்ளது ஆரம்பாக்கம். இதன் சுற்று வட்டார பகுதிகளில் பெரும்பாலும் மீனவ கிராமங்களே அதிக அளவில் உள்ளன. பழவேற்காடு ஏரி மற்றும் அதனையடுத்த கடல் பகுதியில் பிடிக்கப்படும் மீன், இறால், நண்டு உள்பட கடல் வாழ் உணவு பொருட்கள் ஆரம்பாக்கம் பஜாரில் உள்ள மீன் மார்க்கெட்டில் தினமும் விற்பனைக்கு வருகிறது. இந்த மீன் மார்க்கெட்டில் சுமார் 30 மீன் கடைகள் உள்ளன.

ஆரம்பாக்கம் மீன் மார்க்கெட்டில் பெரும்பாலும் மீன் உணவு பொருட்கள் இருப்பு வைக்கப்படாமல் ஒவ்வொரு நாளும் கிடைத்து வருவதால் சுற்று வட்டார பகுதிகளைச்சேர்ந்த வாடிக்கையாளர்கள் தினமும் அதிக அளவில் இங்கு வந்து செல்கின்றனர்.

கொசு உற்பத்தி தளம்

இந்த நிலையில், இந்த மீன் மார்க்கெட் தற்போது சுகாதரமற்ற முறையில் நோய் பரப்பும் இடமாக மாறி உள்ளது. மீன் அங்காடியை சுற்றி பக்கவாட்டில் அமைந்து உள்ள கழிவுநீர் கால்வாயை ஊராட்சி நிர்வாகம் முறையாக சுத்தம் செய்வது இல்லை என்றும், இதனை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வது இல்லை என்றும் புகார் எழுந்து உள்ளது. இதனால் தூர்நாற்றம் மிகுந்த தினசரி மீன் கழிவுகள், அதனை சார்ந்த கழிவுநீர் என அனைத்தும் சாக்கடையாக மாறியுள்ளது, மேலும், இந்த கழிவுநீர் கால்வாய்களில் தேங்குவதால் இந்த மீன் மார்க்கெட் கொசு உற்பத்தி தளமாக தற்போது மாறி உள்ளது.

சுகாதாரமான மீன்அங்காடியாக மாற்ற...

இங்கு மீன் உணவு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் மட்டுமன்றி கடை நடத்தி வரும் மீனவ கிராம மக்களும் இரவு, பகல் என எந்த நேரமும் கொசுக்கடியாலும், மூக்கை பிடிக்கும் துர்நாற்றத்தை சகித்து கொண்டும் அவதிப்பட்டு வருகின்றனர்.

தொற்றுநோய் மற்றும் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் காரணியாக அமைந்து உள்ள இந்த ஆரம்பாக்கம் மீன் மார்க்கெட்டை சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். அதோடு மட்டுமன்றி தினமும் சுத்தம் செய்து சுகாதாரமான மீன் அங்காடியாக ஊராட்சி நிர்வாகம் மாற்றி தர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்