15 மையங்களில் தேசிய திறனாய்வு தேர்வு4,500 மாணவ, மாணவிகள் எழுதினர்

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 15 மையங்களில் நடந்த தேசிய திறனாய்வு தேர்வை 4,500 மாணவ, மாணவிகள் எழுதினர்.

Update: 2023-02-25 18:45 GMT

தேசிய திறனாய்வு தேர்வு

நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை கைவிட்டு உயர்கல்வி கற்க உதவியாக இருக்கவும், மேல்நிலைக் கல்வி தடைபட்டு விடக்கூடாது என்ற நோக்கிலும் மத்திய அரசு சார்பில் ஆண்டு தோறும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலம் சுமார் ஒரு லட்சம் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆண்டு தோறும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வை எழுத தகுதியானவர்கள். இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ-மாணவியருக்கு, மாதம் தோறும் ரூ.1,000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும்.

இந்த உதவித்தொகை சம்பந்தப்பட்ட மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 4 ஆண்டுகளுக்கு, ரூ.48 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

4,500 பேர் தேர்வு எழுதினர்

அதன்படி நேற்று நடந்த தேர்வில் 2022–-23-ம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாநகராட்சி, நகராட்சி, ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, எருமப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சேந்தமங்கலம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கொல்லிமலை மாடல் பள்ளி, நாமகிரிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 15 மையங்களில் இத்தேர்வு நடந்தது. இந்த தேர்வை எழுத 4,607 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் நேற்று 107 பேர் நேற்று தேர்வுக்கு வரவில்லை. மீதமுள்ள 4,500 பேர் தேர்வை எழுதினர்.

Tags:    

மேலும் செய்திகள்