அரசு ஆஸ்பத்திரியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

குழந்தை கடத்தல் சம்பவம் எதிரொலியாக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

Update: 2022-07-04 16:18 GMT

பொள்ளாச்சி, 

குழந்தை கடத்தல் சம்பவம் எதிரொலியாக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

குழந்தை கடத்தல்

பொள்ளாச்சி அரசு தலைமை ஆஸ்பத்திரியில் 9 தளங்கள், 500 படுக்கை வசதியுடன் கூடிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதில் தற்போது ரூ.10 கோடியே 50 லட்சம் செலவில் 6 தளங்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இங்கு பிரசவ அறுவை சிகிச்சை, சிகிச்சைக்கு பிறகு கவனிப்பு உள்ளிட்ட பிரிவுகள் உள்ளன.

புதிய கட்டிடம் திறந்து பயன்பாட்டில் உள்ளது. ஆனால் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை. இந்தநிலையில் நேற்று முன்தினம் பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை தாயும், மகளும் கடத்தி சென்றனர். இதற்கிடையில் ஆஸ்பத்திரியில் கேமராக்கள் இல்லாததால் கடத்தப்பட்ட குழந்தையை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் ஆஸ்பத்திரிக்கு வெளியே வணிக வளாகங்களில் பொருத்தப்பட்டு உள்ள கேமராக்களை வைத்து கடத்தியவர்களை கைது செய்தனர்.

பெயரளவிற்கு கேமராக்கள்

இந்த நிலையில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். வரவேற்பு அறை, நுழைவு வாயில் மற்றும் ஆஸ்பத்திரிக்கு உள்ளே என 3 இடங்களில் மட்டும் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. கேமராக்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரி குழந்தைகள் வார்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தாமல் இருந்தது வேதனை அளிப்பதாகும். இதுபோன்ற ஏதாவது சம்பவங்கள் நடந்தால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கிறார்கள். தற்போது 6 தளங்கள் கட்டப்பட்டும் 3 கேமராக்கள் மட்டும் பெயரளவிற்கு பொருத்தப்பட்டு உள்ளது. எனவே ஆஸ்பத்திரி முழுவதும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பகல் நேரங்களில் மட்டுமல்லாது, இரவு நேரங்களிலும் காவலாளிகளை விழிப்புடன் பணியாற்ற அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்