முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மனுக்களுக்கு உரிய நடவடிக்கை; சிறப்பு அதிகாரி உத்தரவு

முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சிறப்பு அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Update: 2022-06-10 13:59 GMT

தென்காசி:

முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சிறப்பு அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

முதல் கையெழுத்து

மு.க.ஸ்டாலின் தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்றதும் போட்ட முதல் 5 கையெழுத்துகளில் ஒன்று `உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்' என்ற புதிய துறை உருவாக்கத்துக்கானது. தேர்தல் பிரசாரத்தின்போது அவர் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தை முன்னெடுத்து ஒவ்வொரு தொகுதியிலும் மக்களைச் சந்தித்து மனுக்களை பெற்றார். மேலும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அந்த மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்களுக்கு அவர் கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக முதல் கையெழுத்துகளில் ஒன்றாக இதற்கு கையெழுத்திட்டார். இதனைத்தொடர்ந்து, அந்த துறைக்குச் சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டார்.

சிறப்பு அதிகாரி ஆய்வு

இந்த நிலையில் அவர், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று மாவட்டத்தில் உள்ள மாவட்ட கலெக்டர், வருவாய் அலுவலர், உதவி கலெக்டர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் குறித்து உரிய முறையில் தீர்வு காண்பதற்கான பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் துறை முகவரிக்கு பொதுமக்கள் அனுப்பியுள்ள மனுக்கள் தொடர்பான ஆய்வு கூட்டம் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முதல்-அமைச்சரின் முகவரி துறை சிறப்பு அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தர ராஜ் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன் மற்றும் அனைத்து துறை அலுவலக தலைமை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மனுக்கள் மீது நடவடிக்கை

கூட்டத்தில் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க அதிகாரிகளுக்கு சிறப்பு அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ் உத்தரவிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், "பொதுமக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டக்கூடாது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்போது பொதுமக்கள் மனுக்களை அளிப்பதும் குறைந்துவிடும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்