சேலம் மாநகராட்சிக்கு நீதிபதி ஜோதிமணி பாராட்டு

சேலம் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்று நீதிபதி ஜோதிமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-05 19:18 GMT

தூய்மையாக மாறி வருகிறது

சேலம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நேற்று திடக்கழிவு மேலாண்மை குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. மேயர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் கிறிஸ்துராஜ் வரவேற்று பேசினார். தேசிய பசுமை தீர்ப்பாய தென் மண்டல கண்காணிப்பு குழு தலைவர் நீதிபதி ஜோதிமணி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் மாநகராட்சி முழுவதும் குப்பை இல்லாமல் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. குப்பை மேடாக காட்சியளித்த புதிய பஸ் நிலையம் தற்போது தூய்மையாக மாறி வருகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சேலம் மாநகராட்சி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

மக்கும் குப்பைகளில் காய்கறி கழிவுகள் இருப்பதால் அதில் பாக்டீரியா, கொசுக்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. அவற்றை உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும். மக்காத குப்பையில் பிளாஸ்டிக் போன்ற பொருட்களையும் தரம் பிரிக்க வேண்டும். பள்ளி மாணவ- மாணவிகள் தங்களது பெற்றோரிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரிப்பது குறித்து விளக்கி கூற வேண்டும். இவ்வாறு ஜோதிமணி கூறினார்..

மரக்கன்றுகள்

முன்னதாக நீதிபதி ஜோதிமணி அஸ்தம்பட்டி மண்டலம் என்.ஜி.ஜி.ஓ. காலனி பகுதியில் நகருக்குள் வனம் அமைக்கும் திட்டத்தின் கீழ் மாணவ - மாணவிகள் மரக்கன்றுகள் நடுவதை பார்வையிட்டார். தொடர்ந்து அவர் மரங்கன்றுகளை நட்டு வைத்தார்.

பின்னர் திருநகர் பகுதியில் வீடு, வீடாக சென்று பொதுமக்கள் குப்பைகள் தரம் பிரித்து வழங்குதல், காக்காயன்காடு பகுதியில் நுண் உயிர் உரம் தயாரிக்கும் மையம், மூக்கனேரியில் நடைபெற்று வரும் அபிவிருத்தி பணிகள், மான்குட்டை பகுதியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

இதில் துணை மேயர் சாரதாதேவி, மாநகர பொறியாளர் ரவி, மாநகர நல அலுவலர் யோகானந், மண்டல குழுத்தலைவர்கள் உமாராணி, அசோகன், கவுன்சிலர்கள் இளங்கோ, யாதவமூர்த்தி, ஜெயகுமார் உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்