மீன்துறை ஆய்வாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 65 பேருக்கு பணி நியமன ஆணைகள்: முதல்-அமைச்சர் வழங்கினார்
மீன்துறை ஆய்வாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 65 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை,
மீனவ மக்களின் நல்வாழ்விற்காக தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களை மீனவ மக்களிடம் கொண்டு சேர்த்தல், மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குதல், கடல் மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்களுக்கான சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டங்களை செயல்படுத்துதல், மீன்பிடி தடைக்கால நிவாரண உதவித்தொகை வழங்குதல், மீன்பிடி கலன்களை பதிவு செய்தல் மற்றும் உரிமம் வழங்குதல், கடல் மீன் கூண்டு வளர்ப்பை ஊக்குவித்தல், நவீன மீன்பிடி முறைகளில் பயிற்சி அளித்தல் போன்ற பல்வேறு பணிகளில் மீன்துறை ஆய்வாளர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
முக்கியவத்துவம் வாய்ந்த மீன்துறை ஆய்வாளர் பணிகள் தொய்வின்றி நடைபெற, மீன்துறை ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு நடத்தப்பட்டு 65 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
பணி ஆணைகள்
மீன்துறை ஆய்வாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 65 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கவுதமன், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் பழனிசாமி ஆகியோர் பங்கேற்றனர்.