தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில்530 பேருக்கு பணி நியமன ஆணைகள்கலெக்டர் கார்மேகம் தகவல்

Update: 2023-08-05 19:32 GMT

சேலம்

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி நடந்த தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் 530 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு முகாம்

கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் சேலம் சூரமங்கலம் சோனா கல்லூரியில் நேற்று தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 188 தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டன.

இந்த நிறுவனங்களில் காலியாக உள்ள சுமார் 12 ஆயிரம் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடந்தது. இந்த முகாமில், 8, 10, 12-ம் வகுப்பு முடித்தவர்கள், பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், என்ஜினீயர்கள் என சுமார் 3 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட இளைஞர்களும், இளம்பெண்களும் கலந்து கொண்டனர்.

இந்த வேலைவாய்ப்பு முகாமை கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்து பேசியதாவது:-

எடப்பாடி-ஆத்தூர்

தமிழகத்திற்கு அதிகப்படியான பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் பாக்ஸ்கான் நிறுவனம் சாா்பில் பெரிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதுபோல் பல்வேறு நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்காக அழைத்து வருகிறார்கள். இதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் 3 இடங்களில் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. சேலத்தை தொடர்ந்து அடுத்தபடியாக எடப்பாடி மற்றும் ஆத்தூர் பகுதிகளில் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்திட திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் ஆண்டுதோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் கூடுதலாக பல்வேறு நிறுவனங்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று அதிகளவிலான வேலை வாய்ப்புகளை உருவாக்கதொடர் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

530 பேருக்கு பணி ஆணை

முடிவில், தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் பணி வாய்ப்பு பெற்ற 530 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., வேலைவாய்ப்பு மண்டல இணை இயக்குனர் லதா, சோனா கல்விக்குழும தலைவர் வள்ளிப்பா, துணைத்தலைவர் சொக்கு வள்ளிப்பா, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் துணை இயக்குனர் மணி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சிவகுமார் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் உமா மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்