தற்காலிக ஆசிரியர் நியமனத்தை கைவிட வேண்டும்
தற்காலிக ஆசிரியர் நியமனத்தை கைவிட வேண்டும் என்று ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று பணிக்காக காத்திருப்பவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். கூட்டத்தில் மொத்தம் 297 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் இக்கூட்டத்தில் 8 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
இந்த கூட்டத்தில், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் தனித்தனியாக கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து 2013-ம் ஆண்டு முதல் தற்போது வரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நிரந்தர பணி வேண்டி காத்திருக்கும் நிலையில், தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்துக்கான அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் மதுரை ஐகோர்ட்டு கிளை தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்துக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பள்ளி கல்வித்துறையால் தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு திருத்திய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு, தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கோரியும், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கவும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதனால், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பறிபோகும் நிலை உள்ளது.
எனவே, வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை தற்காலிக ஆசிரியர் நியமனத்தை பள்ளிக்கல்வித்துறை கைவிட வேண்டும். மேலும் அரசாணை 149-ஐ உடனடியாக ரத்து செய்து, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களுக்கு நிரந்தர ஆசிரியர் பணி வழங்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
இதேபோல் உப்பார்பட்டி ஊராட்சி துணைத்தலைவர் மலைச்சாமி மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் தமிழ்நாடு கிறிஸ்தவ மக்கள் சபை பேரமைப்பு மாநில தலைவர் சம்மட்டி நாகராஜன் தலைமையில் நிர்வாகிகள் தங்களது கோரிக்கை குறித்து மனுக்கள் கொடுத்தனர்.