பகவதி அம்மன் கோவிலில் பெண் ஓதுவார் நியமனம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பெண் ஓதுவார் நியமனம் செய்யப்பட்டார்.;
தென்தாமரைகுளம்:
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பெண் ஓதுவார் நியமனம் செய்யப்பட்டார்.
பகவதி அம்மன் கோவில்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தீபாராதனையின் போது ஓதுவார்கள் அபிராமி அந்தாதி மற்றும் தேவாரம் பாடல்களை பாடுவது வழக்கம். மேலும் புரட்டாசி மாதம் நடைபெறும் நவராத்திரி திருவிழாவின் போது 10 நாட்களும் இரவு 8.30 மணிக்கு பகவதி அம்மன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் வெளி பிரகாரத்தை சுற்றி பவனி வரும்போது 3-வது சுற்றின் இறுதியில் அம்மன் எழுந்தருளி இருக்கும் வாகனத்தின் முன்பு ஓதுவார்கள் தேவாரம் பாடல்களை பாடியபடி செல்வது வழக்கம்.
இந்தநிலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஓதுவாராக பணியாற்றியவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்று விட்டார். இதனால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தினமும் ஓதுவார் இல்லாத நிலை இருந்து வந்தது.
எனவே கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கென்று தனியாக ஓதுவார் நியமிக்க வேண்டும் என பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
பெண் ஓதுவார் நியமனம்
இதை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருச்சியில் உள்ள உய்யக் கொண்டான் திருமலை சிவன் கோவிலில் கடந்த 10 ஆண்டுளாக ஓதுவராக பணியாற்றி வந்த பிரசன்னா தேவி என்பவர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு புதிய ஓதுவாராக நியமிக்கப்பட்டு உள்ளார். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு இப்போது தான் முதல்முறையாக பெண் ஓதுவார் நியமிக்கப்பட்டு உள்ளார்.
மகிழ்ச்சி அளிப்பதாக பேட்டி
இது குறித்து பிரசன்னா தேவியிடம் கேட்டபோது, எனது சொந்த ஊர் திருச்சி. இசை மற்றும் ஆன்மிகத்தின் ஈர்ப்பால் நான் திருச்சி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2004 முதல் 2007 வரை இசை கல்வி படித்தேன். பின்னர் திருச்சியில் உள்ள உய்யக் கொண்டான் திருமலை சிவன் கோவிலில் ஓதுவாராக இருந்து வந்தேன். எனக்கு திருமணமாகி கணவர் திருச்சியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். 9 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. நான் திருச்சியில் சிவன் கோவிலில் தனியார் நிதி உதவியில் பணியாற்றி வந்தேன். இந்தநிலையில் சுசீந்திரத்தில் நடந்த ஓதுவாருக்கான நேர்காணலில் கலந்து கொண்டேன். இதில் தேர்வு செய்யப்பட்டு அரசு சார்பில் கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் ஓதுவாராக நியமிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கு பணியாற்றுவதை பெருமையாக நினைக்கிறேன். தினமும் அபிராமி அந்தாதி, தேவாரம், திருவாசகம் பாடி ஆன்மிக பணியை சிறந்த முறையில் செய்வேன் என்றார்.