திருப்பூர்
தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு திட்டமாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர்களுக்கு உற்பத்தி, சேவை மற்றும் வணிகம் சார்ந்த தொழில் திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கப்படும்.
கல்வித்தகுதி தேவையில்லை. 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். வருமான உச்சவரம்பு இல்லை. மொத்த திட்டத்தில் 65 சதவீதம் வங்கி கடனாகவும், 35 சதவீதம் முன்முனை மானியமாகவும் வழங்கப்படும். எனவே தகுதியானர்கள் சொந்த மூலதனம் செலுத்த தேவையில்லை. 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும்.
சொந்த முதலீட்டில் தொடங்கப்படும் தொழில் நிறுவனங்களுக்கும், விரிவாக்கத்துக்கும் 35 சதவீதம் பின்முனை மானியம் வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு திருப்பூர் மாவட்ட தொழில் மையத்தை 0421 247507 என்ன எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
---------------