புதிய காஜி நியமனம் செய்ய விண்ணப்பிக்கலாம்
நீலகிரியில் புதிய காஜி நியமனம் செய்ய விண்ணப்பிக்கலாம்.
ஊட்டி
நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- நீலகிரி மாவட்டத்தில் இஸ்லாமிய மக்களின் பிரதிநிதியாக மாவட்ட காஜி நியமனத்திற்காக மாவட்ட கலெக்டரை தலைவராகவும், 5 உலமாக்கள், 2 இஸ்லாமிய முக்கியஸ்தர்களை உறுப்பினர்களாகவும் கொண்ட மாவட்ட அளவிலான காஜி தேர்வு குழு அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் இஸ்லாமிய சட்டவியலில் நிபுணத்துவமிக்க ஆலிம், அங்கீகரிக்கப்பட்ட அரபு கல்லூரி அல்லது நிறுவனத்தில் பேராசிரியராக பணிபுரிந்த நபர்களில் 3 நபர்களுக்கு குறையாமல் தேர்ந்தோர் பெயர் பட்டியலை நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த இஸ்லாமிய பிரமுகர்களை கலந்தாலோசித்த பின்னர், காஜி நியமனம் செய்வதற்காக அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். இந்த பரிந்துரைகளை ஆய்வு செய்து காஜி சட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களை காஜியாக நியமனம் செய்ய அரசாணையிடப்பட்டு உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தேர்வு குழுவால் நியமனம் செய்யப்பட்ட காஜி பதவிக்காலம் கடந்த 13-ந் தேதியுடன் 3 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், தற்போது புதிய காஜி நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதன்படி விண்ணப்பதாரர்களின் புகைப்படத்துடன் கூடிய சுய விவர குறிப்புகள், கல்வி சான்றிதழ்கள் ஆகிய விவரங்களுடன் வருகிற 29-ந் தேதிக்குள் ஊட்டி கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரில் சமர்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.