பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் உதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் உதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2022-06-25 09:10 GMT

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாப்செட்கோ) மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் கடன் திட்டங்கள் வாயிலாக கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களான பொது கால கடன் திட்டம், தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது.

ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதம் வரை. பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதம். சிறு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு மகளிர் உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரையும் குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையும் வழங்கப்படுகிறது.

ஆண்டு வட்டி விகிதம் 4 சதவீதம். மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். திட்ட அலுவலரால் (மகளிர் திட்டம்) தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சிறு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவி குழுவில் உறுப்பினராக உள்ள ஆண்களுக்கு அதிகபட்ச கடன் தொகை ரூ.1 லட்சம் வரையும், ஒரு குழுவுக்கு அதிகபட்ச கடன் தொகை ரூ.15 லட்சம் வரையும் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதம் ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஒரு பயனாளிக்கு ரூ.30 ஆயிரம் வீதம் 2 கறவை மாடுகள் வாங்க ரூ.60 ஆயிரம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது.

ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதம். டாப்செட்கோ கடன் திட்டங்களில் விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

எனவே, மேற்படி திட்டங்களில் பயன்பெற விரும்பும் இந்த மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் உரிய ஆவணங்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் காஞ்சீபுரம் மாவட்ட அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகளையும் அணுகி, விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து, கடன் உதவி பெற்று பயனடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்