செங்கல்பட்டு மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பம் - 28-ந் தேதி கடைசி நாள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடப்பாண்டுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பம் வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க 28-ந் தேதி கடைசி நாள் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-02-04 09:09 GMT

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கு பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி தேர்ச்சி பெறாத, தேர்ச்சி பெற்றவர்கள், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற பொதுப்பிரிவினருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு அவர்கள் தங்களது கல்வித்தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவடைந்து தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி பதிவுதாரர்கள் கல்வித்தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிவடைந்திருக்க வேண்டும்.

31.12.2022 அன்று தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினர் 45 வயதிற்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கு உச்ச வயது வரம்பு எதுவும் இல்லை. விண்ணப்பதாரர் எந்தவொரு கல்வி நிறுவனத்திலும், கல்வி பயிலுபவராக இருத்தல் கூடாது. ஆனால், தொலைதூர கல்வி பயிலுபவராக இருக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கு வருமான உச்ச வரம்பு ஏதும் இல்லை.

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்திற்குரிய விண்ணப்ப படிவத்தினை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையுடன் நேரில் வந்து இலவசமாக பெற்றுகொள்ளலாம் அல்லது https://tnvelaivaaippu.gov.in/downloads/uaApplication.pdf- என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இத்திட்டம் தொடர்பான அனைத்து விவரங்களும் மேற்படி இணையதளத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இம்மாதம் 28-ந் தேதிக்குள் அனைத்து அசல் கல்விசான்றுகள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகத்துடனும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தன.

Tags:    

மேலும் செய்திகள்