தற்காலிக ஆசிரியர் பணிக்கு தரையில் அமர்ந்து விண்ணப்பித்த பட்டதாரிகள்

திருவாரூரில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு பட்டதாரிகள் தரையில் அமர்ந்து விண்ணப்பித்தனர். அடிப்படை வசதிகள் இல்லாததால் அவர்கள் அவதிப்பட்டனர்.;

Update: 2022-07-04 17:04 GMT

திருவாரூரில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு பட்டதாரிகள் தரையில் அமர்ந்து விண்ணப்பித்தனர். அடிப்படை வசதிகள் இல்லாததால் அவர்கள் அவதிப்பட்டனர்.

தற்காலிக ஆசிரியர்

பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் ஜூன் 1-ந் தேதி நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துபூர்வமான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ உரிய கல்வி தகுதி சான்றுகளுடன் தொடர்புடைய மாவட்ட கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தரையில் அமர்ந்து...

அதன்படி நேற்று திருவாரூர் கல்வி மாவட்ட அலுவலகத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஏராளமான ஆண்களும், பெண்களும் திரண்டனர். ஆனால் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய எந்தவித அடிப்படை வசதியும் இல்லாததால் அவர்கள் தரையில் அமர்ந்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய நேரிட்டது.

மாவட்ட கல்வித்துறை சார்பில் குடிநீர் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என்பதால் அவர்கள் அவதிப்பட்டனர்.

333 பணியிடங்கள்

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் மற்றும் மன்னார்குடி கல்வி மாவட்டத்தில் 36 இளநிலை ஆசிரியர்கள், 76 பட்டதாரி ஆசிரியர்கள், 221 முதுகலை ஆசிரியர்கள் என 333 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 6-ந் தேதி ஆகும். குறித்த தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்