நெல்லையப்பர் கோவிலில் அப்பர் பெருமான் தெப்பத்திருவிழா
நெல்லையப்பர் கோவிலில் அப்பர் பெருமான் தெப்பத்திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.;
நெல்லையப்பர் கோவிலில் அப்பர் பெருமான் தெப்பத்திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அப்பர் பெருமான்
முன்னொரு காலத்தில் சைவ மதத்துக்கும் -சமண மதத்துக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது சமண மதத்தை சேர்ந்தவர்கள், சைவ சமய குரவர்களில் ஒருவரான அப்பர் பெருமானின் ஆழ்ந்த பக்தியை பரிசோதிக்கும் வகையில், அவரை கல்லில் கட்டி கடலில் தூக்கிப்போட்டார்கள். அப்போது அப்பர் பெருமான் ''கற்றுணை பூட்டியோர் கடலினில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயே'' என்று சிவனை நினைத்து பாடினார். இதையொட்டி அப்பர் பெருமானுடன் சேர்த்து கட்டப்பட்டிருந்த கல் தெப்பமாக மாறி கடலில் மிதந்து, தனது பக்தியால் சிவன் அருளின் சிறப்பை உலகுக்கு உணர்த்தி இறைவனின் திருக்காட்சி பெற்றார்.
தெப்ப திருவிழா
அப்பர் பெருமான் வாழ்வில் நடந்த வரலாற்றுக்கு ஏற்ப, நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் நேற்று இரவு 7 மணிக்கு தெப்ப திருவிழா நடைபெற்றது. அங்குள்ள பொற்றாமரை குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அப்பர் பெருமான் பவனி வந்தார்.
அதை தொடர்ந்து வரலாற்று தத்துவதற்கு ஏற்ப தெப்ப மண்டபத்தில் சுவாமி கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்க கிளி வாகனத்திலும் எழுந்தருளி அப்பர் பெருமானுக்கு திருக்காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.