இந்தியைத் தவிர்த்த தமிழ்நாடு பல்வேறு வளர்ச்சிகளைக் கண்டுவிட்டது - கனிமொழி எம்.பி.
பிறமொழியாளர்களும் இந்தியை எதிர்க்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமித்ஷா பேசியிருப்பது இந்தித் திணிப்பு என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.;
சென்னை,
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, நேற்று நடைபெற்ற மத்திய மாநில அலுவல் மொழிகள் குறித்த 38-வது நாடாளுமன்ற குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அனைத்து மாநில பிரதான மொழிகளையும் வலுப்படுத்துவதன் மூலமாகவே நமது நாடு வலிமை அடையும்.
இந்தி மொழி என்பது மற்ற மாநில மொழிகளுக்கு போட்டி மொழி அல்ல. அலுவல் மொழியை ஏற்றுக் கொள்வதற்கான தேவையை நாம் உருவாக்க வேண்டும். அலுவல் மொழியை ஏற்றுக் கொள்வது சட்டம் மூலமாகவோ, சுற்றறிக்கை மூலமாகவோ இருக்கக்கூடாது. அது நல்ல முயற்சியின் மூலமாக வரவேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் பேச்சுக்கு, கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "பிறமொழியாளர்களும் இந்தியை எதிர்க்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமித்ஷா பேசியிருப்பது இந்தித் திணிப்பு.
இந்தியைத் தவிர்த்த தமிழ்நாடு பல்வேறு வளர்ச்சிகளைக் கண்டுவிட்டது. நாட்டின் ஒருமைப்பாட்டை அழிக்க நினைக்கும் மத்திய பாஜக அரசுக்கு, மக்கள் 'பன்மைத்துவ'த்தின் அர்த்தத்தை விரைவில் புரியவைப்பார்கள்!" என்று கூறியுள்ளார்.